பக்கங்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012


ஜெபம் கேட்கப்படுவதில்லையே?

அருமையானவர்களே, கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு…. தேடுங்கள் கிடைக்கும் என்றார்என்ற அருமையான ஒரு பாடல் உண்டு. அநேகமாக இந்தப் பாடலை யாவரும் அறிவார்கள். உண்மையில் இந்த வசனங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெபத்தைக் குறித்து போதிக்கும் போது சொன்ன அருமையான வார்த்தைகளாகும். மத்.7:7,8 ஆகிய வசனங்களில்,கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் என்று போதித்தார்.
இதை வாசிக்கும்போது நமக்குள் ஒரு கேள்வி எழும்பக்கூடும். அதாவது இங்கே கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான் என்று எழுதப்பட்டிருக்க மத்தேயு 6:8 உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் என்றும் எழுதப்பட்டிருக்கிறதே. அப்படியானால் நாம் ஏன் ஜெபிக்கவேண்டும்? என்று கேட்கிறவர்கள் உண்டு.
ஒரு குழந்தைக்கு எந்த நேரத்தில் பசிக்கும்? எப்போது அதற்கு பால் கொடுக்கவேண்டும்? என்பதை ஒரு தாய் நன்றாகவே அறிவாள். ஆனாலும் அந்த தாய் என்ன செய்வாள்? தன் குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டிய நேரம் வந்ததும், பாலை தயார் செய்து, அதை புட்டியில் அடைத்து, அதை பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு, குழந்தை அவளை நோக்கி அம்மா பால்… அம்மா பால் என தன் மழலை மொழிகளில் கேட்கும்வரை காத்திருப்பாள் அல்லவா. ஆம், தன் குழந்தை அவளைப் பார்த்து தன் மழலை மொழிகளில் பேசுவதைக் கேட்பதில் அவளுக்கு அவ்வளவு கொள்ளைப் பிரியம்.
பாருங்கள், இவ்வுலகத்தில் தாயானவளுக்கு தன் குழந்தை பேசுவதைக் கேட்பதில் அவ்வளவு பிரியம் இருக்குமானால், நம்முடைய பரம தகப்பனுக்கு நாம் ஜெபத்திலே அவரோடு பேசுவதைக் கேட்பதில் எவ்வளவு பிரியம் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். உண்மையில் ஜெபம் என்பது நமக்கு என்னென்ன தேவை என்பதை பட்டியல் போட்டு கேட்பதல்ல. மாறாக, ஜெபம் நமது பரம தகப்பனோடு உரையாடும் உறவுகொள்ளும் ஐக்கியப்படும் அனுபவமாகும்.
மேலும் கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான் என்று எழுதப்பட்டிருக்க நாம் ஜெபத்திலே கேட்கும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பதில் நமக்குக் கிடைப்பதில்லையே. ஏன் என வினவுபவர்களும் உண்டு. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நம்முடைய ஜெபம் கேட்கப் படாததற்கு பரிசுத்த வேதாகமம் கூறும் பல காரணங்களுள் முக்கியமான 6 காரணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதை அறிந்துகொள்ளும் போது நாம் சரியானமுறையில் எப்படி ஜெபிப்பது என்பதை அறிந்து, அர்த்தமுள்ளவிதத்தில் ஜெபிக்க கற்றுக்கொள்ள முடியும்.
1) கடவுளுக்கு சித்தமில்லாத ஜெபம் கேட்கப்படுவதில்லை.
1யோவா.5:14இல் நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். இந்த வசனத்தில் நாம் ஆண்டவருடைய விருப்பத்தை அவருடைய சித்தத்தை அறிந்து, அதன் படி காரியங்களைக் கேட்டால் அவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்பார் என்பதாக வாசிக்கின்றோம். அப்படியானால் அவருடைய சித்தம் என்ன என்று நீங்கள் கேட்கக்கூடும்.
1தெச.4:3ல் நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது என வாசிக்கக் காண்கிறோம். அதாவது அடிப்படையில் நாம் அனைவரும் பரிசுத்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதே நம்மைக் குறித்த ஆண்டவருடைய விருப்பமாகவும் சித்தமாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்ல; நம் ஒவ்வொருவரைக் குறித்தும் அவருக்கு ஒரு தனிப்பட்ட சித்தமும் திட்டமும் உண்டு. எனவே அவரை உண்மையாய் நேசிக்க ஆரம்பிக்கும்போது அவருடைய சித்தத்தை அறிந்து, அதற்கேற்ப ஜெபிப்போமே ஒழிய ஆண்டவருடைய சித்தத்திற்கு விரோதமாய் எதையும் கேட்கமாட்டோம்.
யோபு தாங்கமுடியாத வேதனையின் மத்தியில் தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி ஆண்டவரிடம் ஜெபித்தான். ஆனால் ஆண்டவர் அந்த ஜெபத்தைக் கேட்கவில்லை. ஏனெனில் அப்படிப்பட்ட ஜெபம் ஆண்டவருடைய சித்தத்திற்கு விரோதமானதும், அவருக்குப் பிரியமற்றதுமான ஜெபமாகும். ஆண்டவருடைய பிள்ளைகள் ஒருபோதும், எவ்வளவு வேதனையான அனுபவத்திற்கூடாக சென்றாலும், என் உயிரை எடுத்துக் கொள்ளும் என்று ஒருபோதும் ஜெபிக்கவே கூடாது.
ஆனால், தானியேலின் ஜெபத்தை எடுத்துக்கொண்டால் தானியேல் சரியான விதத்தில் ஜெபிக்கிற மனுஷனாய் காணப்பட்டார். தானியேல் 9ஆம் அதிகாரத்தில் முதலாவது, அவன் கர்த்தருடைய வார்த்தையை ஆராய்ந்து பார்த்து, ஆண்டவருடைய தெளிவான சித்தம் என்ன என அறிந்து கொண்டவனாக, ஆண்டவரின் சமுகத்தில் நிச்சயத்தோடு ஜெபிக்க வருகிறான்.
இன்றைக்கு அநேகர் தங்களுடைய சித்தத்தை ஆண்டவர் நிறைவேற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர, ஆண்டவருடைய சித்தம் என்ன என அறிந்து அவரது சமுகத்திற்கு வருகிறவர்கள் வெகு குறைவு.
அருமையானவர்களே, நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டியதொன்று உண்டு. அதாவது தேவன் நமக்காக படைக்கப் படவில்லை. நாம்தான் தேவனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் படைக்கப் பட்டிருக்கிறோம். எனவே நம்மைப் படைத்த ஆண்டவருக்கு நம்மைக்குறித்து ஒரு மேலான திட்டமும் ஒரு சித்தமும் உண்டு. எனவே அந்த சித்தத்திற்கு அப்பாற்பட்ட அல்லது அவரது சித்தத்திற்கு விரோதமான ஒரு காரியத்தைக் கேட்டால் அப்படிப்பட்ட ஜெபம் கேட்கப் படுவதில்லை.
2) தவறான நோக்கம் கொண்ட ஜெபம் கேட்கப்படுவதில்லை.
யாக்கோபு 4:3ல், நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாத விதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.அருமையானவர்களே, ஆண்டவரிடம் ஜெபத்தில் நாம் கேட்கும் காரியங்கள் நமது சொந்த இச்சைகளை திருப்திப்படுத்தும் காரியங்களாக இருக்குமானால் அந்த ஜெபம் கேட்கப்படுவதில்லை என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். இந்த வசனத்திலே இச்சை என்று குறிப்பிடப்படுவது பாவ ஆசையாகும்.
இன்றைக்கு பாவத்தில் ஊறிப்போன ஒருவனுக்கு சரியான விண்ணப்பம் எது? பாவ ஆசையின் விண்ணப்பம் எது? என இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பிரித்து அறிய முடிவதில்லை. நம்மைக் குறித்த ஆண்டவருடைய திருச்சித்தத்தையும், பரிபூரண திட்டத்தையும் நிறைவேற்றாத எந்த விருப்பமும் பாவ இச்சையாகும்.
தேவன் ஆதாம் ஏவாளைப் படைத்தபோது அவர்களைக்குறித்து ஆண்டவருக்கு ஒரு பரிபூரணமான திட்டம், சித்தம் இருந்தது. ஆனால் அவர்களோ ஆண்டவருடைய திருச் சித்தத்தை மீறி தங்கள் பாவ இச்சைக்கு இடங்கொடுத்து அவருடைய வார்த்தையை மீறி, உண்ணவேண்டாம் என்று சொன்ன அந்தக் கனியை சாப்பிட்டதினாலே பாவம்செய்து, ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை இழந்தது மட்டுமின்றி, தங்கள் சொந்த வாழ்விலே சாபத்தையும் தேடிக்கொண்டார்கள்.
அதனால்தான் 1யோவா.2:16 மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை என்பன பிதாவினாலுண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். அதாவது நமது மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்பன நமது பரம பிதாவினாலுண்டானவைகளல்ல, அவை இந்த உலகத்தின் பாவத்தினால் உண்டானது என்று யோவான் குறிப்பிடுகிறார். எனவே நமது பாவ இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்பும் நமது உள்ளத்தின் ஆசைகளை ஆண்டவர் ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை.
3) விசுவாசமில்லாத ஜெபம் கேட்கப்படுவதில்லை.
யாக்.1:5-7 வசனங்களில், உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன்தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
நம்முடைய ஜெபம் கேட்கப்பட வேண்டுமானால் விசுவாசம் மிக அவசியமாகும். சந்தேகம் கொண்டு அல்லது அவிசுவாசத்தோடு ஏறெடுக்கும் ஜெபத்தை ஆண்டவர் ஒரு போதும் கேட்பதில்லை. நாம் ஒரு காரியத்தை ஜெபத்தில் கேட்கும்போது அது நமது ஆண்டவருடைய சித்தத்திற்கு விரோதமில்லாத ஒரு விண்ணப்பமாக இருக்குமானால் அதை அவர் தருவார் என்று நம்பவேண்டும். அதை விட்டு விட்டு அவர் தருவாரோ? மாட்டாரோ? அவரால் இதைச் செய்யமுடியுமோ? இல்லையோ? என சந்தேகப்படுவோமானால், அப்படிப்பட்ட மனிதன் கர்த்தரிடமிருந்து எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக என்று யாக்கோபு எழுதுகிறார்.
ஜெபம் என்பது ஆண்டவரிடம் கெஞ்சுவது அல்ல, விசுவாசிப்பது.ஆண்டவருடைய வார்த்தையையும், அவரது வல்லமையையும் விசுவாசிப்பதுதான் ஜெபம். ஒரு விசுவாசி ஜெபத்தில் வளரும்போது அவன் ஆண்டவர் மேலுள்ள விசுவாசத்தில் வளருகிறான் என்று அர்த்தம்.
உதாரணமாக, நாம் எந்தளவு ஜெபத்தில் விசுவாசத்தோடு வருகிறோம் என்பதை விளக்க ஒரு கதை ஒன்றைக் கூறுவார்கள். ஒருமுறை ஒரு கிராமத்தில் மழைபெய்யாமல் அதிக வறட்சி ஏற்பட்டது. உடனே அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, மழைக்காக வேண்டி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்ய, ஒரு பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்களாம். அந்தக் கூட்டத்திற்கு அந்த ஊர் மக்கள் திரண்டு வந்தார்கள். கூட்டத்தின் ஆரம்பத்திலே போதகர் வந்திருந்த மக்களைப் பார்த்து, உங்களில் எத்தனைபேர் ஆண்டவர் நம் ஜெபத்தை கேட்டு மழை தருவார் என்று விசுவாசிக்கிறீர்கள் என்று கேட்டாராம். உடனே வந்திருந்த மக்கள் அனைவரும் கைகளை உயர்த்தி, ‘நாங்கள் விசுவாசிக்கிறோம்’ என்று பதில் கூறினார்களாம். உடனே போதகர் மறுபடியும் மக்களை நோக்கி:உங்களில் எத்தனைபேர் ஆண்டவர் நம் ஜெபத்தை கேட்டு இன்றைக்கு, இன்று மாலை, மழை தரக்கூடியவர் என்று விசுவாசிக்கிறீர்கள் எனக் கேட்டாராம். உடனே வந்திருந்த அனைவரும் மறுபடியும் தம் கைகளை உயர்த்தி, நாங்கள் விசுவாசிக்கிறோம் என்று பதில் கூறினார்களாம். உடனே போதகர் மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால் உங்களில் எத்தனை பேர் உங்கள் குடைகளை எடுத்து வந்தீர்கள் என்று கேட்க, ஒரே ஒரு சிறுபெண் மாத்திரம் தனது கைகளில் ஒரு சிறிய குடையை உயர்த்திக் காட்டினாளாம்.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் என எபி. 11:6ல் வாசிக்கிறோம். ஆம், ஜெபம் என்பது நமது விசுவாசத்தின் அடையாளம். விசுவாசம் இல்லாத ஜெபத்தை தேவன் ஒருபோதும் கேட்பதில்லை.
4) அக்கிரம சிந்தையுள்ளவனின் ஜெபம் கேட்கப்படுவதில்லை.
சங்.66:18ல் என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். நம்முடைய ஜெபம் கேட்கப்படாததற்கு இன்னுமொரு காரணம் அக்கிரம சிந்தை அல்லது பாவ சிந்தை என்பதை தூயவேதாகமம் சுட்டிக்காட்டுகின்றது.
இன்றைக்கு சிலர் வியாபார ஸ்தலங்களில் காலையில் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். கடவுளே இன்றைக்கு நல்ல வியாபாரம் நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்துவிட்டு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர்களின் வியாபாரத்தைப் பார்த்தால், அவர்கள் விற்கும் பொருட்களில் கலப்படம் செய்து விற்பதையும், நிறைகுறைந்த கள்ளத் தராசை உபயோகிப்பதையும், பொய்சொல்லி ஏமாற்றி ஜனங்களை வஞ்சித்து வியாபாரம் செய்வதையும் கவனித்திருப்பீர்கள். இப்படிப்பட்டவர்களின் ஜெபங்கள் நிச்சயம் கேட்கப்படுவதில்லை.
ஏசா.59:1,2ல், இதோ, இரட்சிக்கக்கூடாத படிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஆண்டவர் பாவியை நேசிக்கிறார். ஏனென்றால் அவர் அன்புள்ள ஆண்டவர். ஆனால் அதேவேளை அவர் பாவத்தை வெறுக்கின்றவர். ஆகவே பரிசுத்தமுள்ள கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே, மனுஷனுடைய அக்கிரமம் அல்லது அவனது பாவம் நடுவாக ஒரு தடையாகப் பிரிவினையை உண்டாக்குகிறது. வானத்திலே மேகமூட்டம் எப்படியாக சூரியனைக் காணக்கூடாதபடிக்கு நம் கண்களுக்கு மறைக்கிறதோ, அதேபோல மனுஷனுடைய பாவம், தேவன் நமது ஜெபத்திற்கு செவி கொடாதபடி அவருடைய முகத்தை நமக்கு மறைக்கின்றதாயிருக்கின்றது. அப்படியானால் பாவிகளின் ஜெபத்தை தேவன் கேட்பதே இல்லையா? கேட்பார்! ஒரு பாவி மனந்திரும்பி தன் பாவத்தை அறிக்கைசெய்து ஆண்டவரிடம் பாவமன்னிப்பைக் கேட்டு ஜெபிக்கும்போது ஆண்டவர் நிச்சயம் ஜெபத்தைக் கேட்டு அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வார். ஆனால் பாவத்தில் ஊறிப்போன ஒரு மனிதன், ஆண்டவர் உணர்த்திய பாவத்தை விட்டு மனந்திரும்ப மனம் இல்லாத ஒருவன், அவரிடம் அப்பா பிதாவேஎன்ற உறவின் அடிப்படையில் நெருங்கமுடியும். எனினும், அவனுடைய அக்கிரமம் அவனுக்கு முன்பாக தடையாக நிற்கும். எனவே அக்கிரமசிந்தை உள்ளவனின் ஜெபம் கேட்கப்படுவதில்லை.
5) வேதத்தை கேளாதவனின் ஜெபம் கேட்கப்படுவதில்லை.
நீதி.28:9ல், வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானதுஜெபம் என்பது நாம் தேவனோடு பேசும் ஒரு ஊடகம். அதுபோல வேதம் என்பது தேவன் நம்மோடு பேசும் ஒரு ஊடகம். ஆக நாம் பேசுவதை தேவன் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்போமானால், தேவன் வேதாகமத்தின் ஊடாக நம்மோடு பேசுவதை நாம் கேட்கத் தயாராக இருக்கவேண்டும் என்ற ஒரு நிபந்தனையை ஆண்டவர் நம்முன் வைத்திருக்கிறார். பொதுவாக நடைமுறை வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் கணவன் அல்லது மனைவி அல்லது பிள்ளைகள், நண்பர்கள் யாராவது நாம் பேசுவதைக் கேட்க விருப்பமில்லாதவர்களாக தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, அவர்கள் பேசுவதை மட்டுமே கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்களானால் அவர்களைக்குறித்து நாம் என்ன நினைப்போம். அவர்கள் பேசுவதை கேட்கவும் நமக்கு மனமிருக்காது. அதுபோலத்தான் ஆண்டவர் பேசுவதைக் கேட்க மனமில்லாதவனின் ஜெபமும் இருக்கும்.
அதனால்தான் சங்.1:2ல், “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். பாக்கியவான் என்றால் யார்? ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன். பாருங்கள், யார் ஆசீர்வதிக்கப்பட்ட மனுஷன்? கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருப்பது மட்டுமல்ல, இரவும் பகலும் அதைத் தியானிக்கிற மனுஷன் பாக்கியவானாயிருப்பான். தேவ வார்த்தையை எப்போதும் தன் மனதில்கொண்டு அதைக் கடைபிடிக்கிற மனுஷன் எவனோ, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவன்.
அருமையானவர்களே, வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதத்தை விரும்பாத மனுஷன் எவருமே இருக்கமுடியாது. நம் எல்லோருக்குமே ஆண்டவரின் ஆசீர்வாதம் வேண்டும். அப்படியானால் ஆண்டவர் நமக்கு வைத்திருக்கிற நிபந்தனை என்ன? அவருடைய வேத வார்த்தையை நேசித்து வாசித்து அதை நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும்போது நாம் அவருடைய ஆசீர்வாதத்துக்குரிய மக்களாக மாறுவோம். ஆனால், வேதத்தைக் கேளாதபடி நம்முடைய உள்ளத்தை கடினப் படுத்துவோமானால், அப்படிப்பட்ட ஒருவருடைய ஜெபமும் அவருக்கு பிரியமாய் இருக்காது.
6) மற்றவர்களோடு சரியான உறவில்லாதவர்களின் ஜெபம் கேட்கப்படுவதில்லை.
நம்முடைய ஜெபம் கேட்கப்படவேண்டுமானால் நாம் ஒருவரோடு ஒருவர் நல்லுறவு கொண்டவர்களாக இருக்கவேண்டும். அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள் (1பேது. 3:7).
ஒரு குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படுமானால் நிச்சயமாகவே அது ஜெபத்திற்கும் பாதகமாக அமையும் என்றே பேதுரு எழுதுகின்றார். குடும்பத்திலே கசப்பு, கோபம், மூர்க்கம், தூஷணம், குரோதம், வைராக்கியம், சண்டை, பகை இருக்குமானால் அது குடும்பத்தின் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் மட்டுமல்ல, திருமண பந்தத்தையும் சீரழித்து விடும். இன்றைக்கு இப்படியாக கணவன் ஒருபுறம், மனைவி ஒருபுறம், அதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் ஒருபுறம் என சீரழிந்த குடும்ப உறவுகள் ஏராளம்.
குடும்பத்தில் தகப்பன் ஒருபுறம், தாய் ஒருபுறம் என எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுடன் மன சமாதானமின்றி வாழ்க்கை நடத்துவார்களானால், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் அந்த ஜெபத்தை ஆண்டவர் எப்படிக் கேட்கமுடியும்? ஆனால் ஒரு நல்ல செய்தி என்ன தெரியுமா? இப்படியாக உடைந்த குடும்பங்களையும் கிறிஸ்துவினால் ஒன்றிணைக்கமுடியும். அவர் தரும் புதுவாழ்வு நமது குடும்பத்தில் இழந்துபோன சமாதானத்தையும் சந்தோஷத்தையும் மறுபடியும் கொண்டுவரமுடியும். அப்படியாக நல்லுறவு கொண்டவர்களாக நாம் ஏறெடுக்கும் ஜெபங்களையே நமது ஆண்டவர் கேட்பார். அந்த குடும்பங்களில் தேவ ஆசீர்வாதம் தங்கும்.
மத்.18:19ல் உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒருமனப்பட்டவர்களாய், அதாவது மற்றவர்களோடு சரியான நல்லுறவு கொண்டவர்களாய் ஜெபத்திலே வரும்போது அந்த ஜெபத்தைக் கேட்பேன் என ஆண்டவர் தாமே நமக்கு வாக்களித்துள்ளார்.
இதை வாசிக்கின்ற அருமையானவர்களே, இன்றைய நாளிலாவது, நம்முடைய ஆண்டவருக்கு முன்பாக இந்த 6 காரியங்களை வைத்து நம்மை நாமே ஆராய்ந்துபார்ப்போம். நாம் எந்தக் காரியத்திலே தவறியிருக்கிறோம் என்பதை அறிந்து ஆண்டவருக்கு முன்பாக மனந்திரும்பியவர்களாக நமது குறைவுகளையும், பலவீனங்களையும், பாவத்தையும் அறிக்கைசெய்து ஆண்டவரின் ஆசீர்வாதங்களுக்குரிய மக்களாக வாழ ஆண்டவர்தாமே நமக்கு உதவிசெய்வாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக