பக்கங்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012


தாலந்துகளின் உவமை


மத்தேயு 25:14-30 வரையிலான வேத பகுதியை தாலந்துகளின் உவமைஎன்று அழைப்பதுண்டு. இந்த உவமையில் குறிப்பிடப்படும் தாலந்தை வரங்களுக்கு ஒப்பிடக்கூடாது. அதேபோல தாலந்து என்பது பணத்தையும் குறிக்கவில்லை. இயேசு இங்கு குறிப்பிடும் தாலந்து ஒரு எடை அளவாகும். ஒரு தாலந்து வெள்ளி என்பது இங்கிலாந்து பணத்திலே பத்தாயிரத்துக்கு இணையானதாகும். அப்படியெனில் ஒருவனிடத்தில் ஐந்து தாலந்துள்ள ஒரு பெரும் பணத்தைக் கொடுத்தார். இந்த உவமையை இயேசு எதற்காக சொன்னார் என்பதைப் பார்ப்போம்.
இயேசுவைச் சுற்றி இரண்டுவிதமான கூட்டத்தினர் இருந்தனர். ஒரு கூட்டம்பக்தி மார்க்கத்தவர். பரிசேயர்கள் தாங்கள் பக்தி மார்க்கத்தில் இருப்பதாக சொல்லிக் கொண்டனர். இன்னொன்று அவருடைய சீஷர்களின் கூட்டத்தினர் ஆவர். இயேசுகிறிஸ்து இவ்விரு கூட்டத்தினரையும் இணைத்து அவர்களுக்கு உவமைகளின் வாயிலாக செய்திகளை சொன்னார்.
இந்த பக்தி மார்க்கத்தார் வேத பிரமாணங்களை கைக்கொண்டவர்களாய் இருந்தாலும் அவர்களிடத்தில் அநேக குறைகள் இருந்தது. இவர்கள் மற்றவர்களோடு பழகவும் ஐக்கியம் கொள்ளவும் மறுத்தனர். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பாவிகளோடும் ஆயக்காரரோடும் பந்தியிருந்ததைப் பார்த்தபோது இவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. பக்திநெறியடைந்தவர்கள் தங்களை மற்றவர்களிடத்திலிருந்து தங்களை விலக்கிக் காத்துக் கொள்ளவேண்டும் என்கிற தவறான நம்பிக்கையிலே இருந்துவந்தனர். ஆனால் ஆண்டவர் அந்த மக்கள் மத்தியிலும்கூட பரலோக இராஜ்ஜியத்தின் செய்தியை ஆயக்கார ரோடும் விபச்சாரக்காரரோடும் பகிர்ந்து கொண்டார். இதைக் கண்டவுடன் மேலும் மனம்வெதும்பினார்கள். இந்த பரிசுத்த மார்க்கத்தார் வேதபிரமாணத்திற்குப் புதிய போதனைகளைக் கற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் சீஷன் என்பதற்கு கற்றுக்கொள்ளுகிறவன் என்று அர்த்தமாகும். இவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மையோடு இருந்தனர். வேதபிரமாணத்தின் வியாக்கியானம் இதுதான், இதற்குமேல் வேதத்தின் உள்ளான உண்மையான காரியங்களை தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதி இயேசுகிறிஸ்து கூறிய சத்தியங்களைக் கேட்பதற்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டனர். மூன்றாவதாக இவர்களிடத்தில் இருந்த குறைபாடு என்னவெனில் பிறருக்கு உதவ மறுத்தனர். வேதபிரமாணம் மற்றவர்களுக்கு நாம் உதவுவதையும் இரக்கம் பாராட்டுவதையும் அன்பு கூருவதையும் போதிக்கிறது. ஆனால் இந்த பரிசேயர்கள் வேதபிரமாணங்களைப் பெயரளவில் கைக்கொண்டார்களே தவிர எவருக்கும் உதவி செய்வதையோ எவரிடத்திலும் அன்புகூருவதையோ தவிர்த்து வந்தனர். மற்றவர்களின் உதவியினாலும் பணத்தினாலும் ஆதரவினாலும் தங்களை வளர்த்துக்கொண்ட இவர்கள் மற்றவர்களின்மேல் தங்கள் பாரமான சுமைகளை வைத்தனர். இவர்களுக்காகதான் ஆண்டவர் இந்த உவமையை சொன்னார். வேத அறிவும் அனுபவமும் பக்திநெறி கோட்பாடும் ஆகியவை இருந்தபோதும் இவர்களிடத்தில் இவைகளைப் பயன்படுத்தும்படி மற்றவர்களுக்கு இடங்கொடுக்கவில்லை. எனவேதான் தாலந்துகளை பயன்படுத்தாத அந்த மனிதனுக்கு இவர்களை ஒப்பிடுகின்றார்.
இன்னொரு கூட்டத்தினராக இயேசுவை சூழ்ந்திருந்தவர்கள் அவருடைய சீஷர்கள் ஆவர். இவர்களுக்கு பெரிய ஈவாகவும் தாலந்தாகவும் இருந்தது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆவார். தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவிற்கு ஸ்தோத்திரம் என்று சொன்ன வண்ணமாக சீஷர்களுக்கு இயேசு ஒரு பெரிய ஈவாக இருந்தார். இந்த ஈவை மற்றவர்களும் பெற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் வேண்டும் என சீஷர்களுக்கு உணர்த்தும்படியாக இந்த உவமையைச் சொன்னார். எனவே நாமும் தேவனிடத்திலிருந்து பெற்ற ஈவுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் நாமும் பரிசேயர்களாக மாறிவிடுவோம். இயேசுகிறிஸ்து பரமேறும் போது, உலகமெங்கும் போய் சகல ஜாதிகளுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் என்றார். சுவிசேஷத்தை அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை!
இந்த உவமையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எஜமானனாக குறிப்பிடப்படுகிறார். எஜமான் ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தையும் மற்ற இருவரிடத்திலும் இரண்டு, ஒன்று என்று பகிர்ந்து கொடுக்கிறார். எஜமான் ஒவ்வொருவருக்கும் தாலந்துகளை சமஅளவில் கொடுக்கவில்லை. அவர்களுடைய திறமைக்குத் தக்கப்படி ஐந்து, இரண்டு, ஒன்று என்று கொடுக்கிறார். மனிதர்கள் ஒரேவிதமாக இருந்தாலும் வித்தியாசமான மனமும் ஆளத்துவமும் திறமையும் உடையவர்கள். அவரவர்களுடைய வாழ்விற்குத் தகுந்தாற்போல நமக்கு கிருபைகள், வல்லமைகள், வாய்ப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்து அளிக்கிறார். இவைகளைப் பெற்றுக்கொண்ட நாம் சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாது. நாம் அவைகளைப் பயன்படுத்தும்படி அழைக்கப்படுகிறோம். ஒரு சிறு பெண்ணை தாயானவள் இரண்டு காலில் ஒரு காலை மடக்கி கட்டிவைத்து அவளது ஆடையினால் மூடிவிடுவாள். அவளது கையில் ஒரு கம்பையும் தந்துவிடுவாள். எனவே இச்சிறுமிக்கு ஒருகால் இருப்பதுபோல அவளைப் பார்ப்பவர்களுக்கு தோற்ற மளிக்கும். ஒவ்வொரு நாளும் அப்பெண்மணி இவ்வாறு செய்துவந்தபடியால் நாளடைவில் அந்த சிறுமியின் ஒரு காலானது செயலற்றுப் போனது. நாம் அநேக மொழிகளைப் பேசும் கிருபை உடையவராயிருக்கலாம். அதில் சில மொழிகள் பேசுவதை விட்டுவிட்டால் அவைகளை அப்படியே மறந்துவிடுவோம். அதைப்போலவே நாம் பெற்ற தாலந்துகளையும் வரங்களையும் பயன்படுத்தவில்லையென்றால் அவைகளை இழந்துபோகிற நிலை நமக்கு ஏற்படும்.
இரண்டாவதாக தாலந்துகளைக் கொடுத்த எஜமான் வேலைக்காரனிடம் கணக்குக் கேட்கிறார். இவ்வாறு கணக்கு ஒப்புவிக்கும்போது, ஐந்து தாலந்துகளைப் பெற்றவன் தான் வேறு ஐந்து தாலந்துகளை சம்பாதித்ததாகவும் இரண்டு தாலந்துகளைப் பெற்றவன் தான் வேறு இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்த தாகவும் கூறுகிறான். ஆனால் ஒரு தாலந்தைப் பெற்றவனோ தான் பெற்ற தாலந்தை மண்ணிலே புதைத்துவைத்தேன் என்றான். இதைப்போலவே ஆண்டவரிடமிருந்து கிருபைகளையும் வல்லமையையும் வாக்குத்தத்தங்களையும் எத்தனையோ சிலாக்கியங்களையும் பெற்ற நாம் அவரது இராஜ்ஜியத்திற்காக பயன்படுத்தினோமா என்று கர்த்தர் கேட்கும்போது நாம் அவருக்கு கணக்கு கொடுக்கவேண்டும். நேரம், பணம், மற்றெல்லாவற்றைக் குறித்தும் ஒருநாளில் நாம் கணக்கு கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
மூன்றாவதாக தாலந்துகளைக் கொடுத்த எஜமான், அதைப் பெற்ற வேலைக்காரர்கள் எவ்வித இடர்பாடுகள் வந்தாலும் துணிச்சலோடு முயற்சி எடுத்து அதைப் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறார்.ஐந்து தாலந்துகளையும் இரண்டு தாலந்துகளையும் பெற்றவன் துணிச்சலோடு அவைகளைப் பயன்படுத்தி தாலந்துகளை சம்பாதித்தனர். ஆனால் ஒரு தாலந்தைப் பெற்றவனோ துணிச்சலையும் தைரியத்தையும் இழந்தவனாயும் தான் கஷ்டப்படுவதை விரும்பாதவனாயுமிருந்தபடியால் அதைப் புதைத்து வைத்தான். அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரயாசப்படுகிறவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்கின்றனர்.
அவனிடத்தில் எஜமான் கணக்குக்கேட்ட பொழுது, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்திலே சேர்க்கிற கடினமான மனிதன் என்று அறிவேன் என்று சொன்னான். இவனிடத்தில் நாம் கற்றுக் கொள்கிற பாடம் என்ன?
முதலாவது ஒரு தாலந்தைப் பெற்றவன் தன் எஜமானனைத் தவறாகப் புரிந்து வைத்திருந்தான். அவனைக் குறித்து கடினமுள்ளவன், அவன் விதைக்காத இடத்திலே அறுக்கிறவன் என்று கூறுகிறான். விதைத்தால்தான் அறுக்கமுடியும் என்பதுதான் உலக இயல்பு. இவன் விதைக்க விரும்பவில்லை. ஆகையினால் தான் அவன் விருத்தியடையவில்லை. இன்றைக்கும் ஆண்டவரைக் குறித்தும் ஆவியானவரைக் குறித்தும் அநேகர் தவறான எண்ணம் உடையவர்களாயிருக்கின்றனர். அவர் நமது பிரயாசத்திற்கு ஏற்ற ஆசீர்வாதத்தையும் நன்மைகளையும் தருகிறவராயிருக்கிறார். உங்கள் பிரயாசங்களை மறந்துபோவதற்கு அவர் அநீதியுள்ளவர் அல்ல. அவன் தன் எஜமானன் கடினமானவன் என்று தவறாக எண்ணி பயந்ததினால்தான் பெற்ற தாலந்தை பூமியிலே புதைத்து வைத்தான். இதோ, உம்முடையதை வாங்கிக் கொள்ளும் என்றான். எஜமான் அவனிடத்தில், நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டு வைத்திருந்திருக்கலாம். அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக் கொள்ளுவேனே என்றான்.
இரண்டாவது, அவன் சரியான இடத்தில் முதலீடு செய்யாமல் தவறான இடத்தில் புதைத்து வைத்தான். வங்கியிலோ காசுக்காரரின் கையிலோ கொடுத்திருந்தால் அதற்குள்ள வட்டி கிடைத்திருந்திருக்கும். ஆண்டவரே வட்டி வாங்கச் சொல்லி விட்டாரோ என்று சிலர் நினைக்கலாம். அப்படியல்ல, நீ வங்கியிலே முதலீடு செய்திருந்தால் அந்தப் பணத்திற்கு எவ்வளவு கூடுதலாக கிடைக்கிறதோ அதைத்தான் இங்கு இயேசு விளக்குகிறார். ஒரு தாலந்தை வாங்கினவன் வியாபாரம் செய்ய வேண்டுமென்றோ அதைப் பெருக்கவேண்டுமென்றோ எண்ணாமல் நஷ்டத்தைத்தான் எண்ணினான். வியாபாரத்திலே லாபமும் நஷ்டமும் வரலாம். திட்டமிட்டு பிரயாசப்பட்டு ஜாக்கிரதையோடு செயல்பட்டிருந்தால் அவன் ஒரு தாலந்தை இரட்டிப்பாக்கியிருக்கலாம். தனக்கு நல்ல வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் இருந்தபோதும் தவறான இடத்தில் முதலீடு செய்தான். மற்ற இரண்டு பேரும் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் பிரயாசப்பட்டு வியாபாரம் செய்தார்கள். எனவே தங்களுடைய தாலந்துகளை இரட்டிப்பாக்கினார்கள். எஜமான் இவர்களைப் பார்த்து,“நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று கூறுகிறான்.
தன் எஜமானனைக் குறித்து தவறாகப் புரிந்துகொண்டவனும் தவறான இடத்தில் முதலீடு செய்தவனுமான அவனிடத்திலிருந்து தாலந்து பிடுங்கப்பட்டு அது பத்து தாலந்து உள்ளவனிடத்தில் கொடுக்கப்பட்டது. எஜமான் அவனைக் கடிந்துகொண்டு, “பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப் போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றான். இப்பொழுது அவன் தவறான இடத்திலே தண்டனை அனுபவிக்கும்படி அனுப்பப்பட்டான்.
இதை வாசிக்கும் அருமையானவர்களே, நமக்கும் ஆண்டவர் நம்முடைய வாழ்விற்குத் தகுந்தாற்போலவும், நமது திறமைக்கேற்ற பிரகாரமாகவும் தாலந்துகளைப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். அந்த ஒரு தாலந்தைப் பெற்றவனைப்போல் அல்லாமல், நமது எஜமானாகிய இயேசுகிறிஸ்துவுக்காக தைரியத்தோடும் முழுபெலத்தோடும் திட்டமிட்டு அதை தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக பயன்படுத்துவோம், அதைப் பெருக்குவோம், ஆத்தும ஆதாயம் செய்வோம்.
அவர் வரும் போது “உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே”என்று நம்மை பாராட்டுவார். இந்த பாக்கியத்தை நீங்கள் அனைவரும் பெற தேவன் கிருபை செய்வாராக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக