பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

பாட்டில் தயாரிப்பு

பாட்டில் தயாரிப்பு
இது பிளாஸ்டிக் யுகம். சாப்பிடுகிற தட்டுகளில் ஆரம்பித்து உட்காருகிற சேர்கள் வரை எல்லாமே பிளாஸ்டிக் மயம்தான். அதிலும், தண்ணீரோ அல்லது ஜூஸோ குடிக்கப் பயன்படும் பெட் பாட்டில்களுக்கு இப்போது ஏகப்பட்ட வரவேற்பு. பள்ளி செல்லும் குழந்தைகளில் ஆரம்பித்து அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை இருக்கும் ஒரு வீட்டுக்கு, குறைந்தபட்சம் ஐந்து முதல் எட்டு பெட் பாட்டில்களாவது தேவைப்படுகிறது என்ற ஒன்றே போதும், இந்த பிஸினஸின் எதிர்காலத்தை எடுத்துச் சொல்ல! 

சந்தை வாய்ப்பு! 

ஃபுட் கிரேட் பேக்கேஜிங் பிளாஸ்டிக்’ என்று அழைக்கப்படும் தரத்திலான பிளாஸ்டிக் மூலமாக இந்த பெட் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான மூலப் பொருள் பாலியெத்திலின் டெரிப்தலேட்’. இதனைக் கொண்டுதான் குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் என அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன. அதனால் திரவ வகைகளை விற்கும் நிறுவனங்களிடம் ஆர்டர் எடுத்து சப்ளை செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

முதலீடு! 

இந்தத் தொழிலுக்கு மொத்தம் 15 லட்ச ரூபாய் வரை தேவைப்படும். இயந்திரங்களை வாங்க 12.5 லட்சம் ரூபாய் வரை ஆகும். அத்துடன் செயல்பாட்டு மூலதனமாக 2.44 லட்சம் ரூபாய் தேவைப்படும். தொழில் தொடங்கும் முதலீட்டாளர் மொத்த முதலீட்டில் 5%, அதாவது 0.75 லட்சம் ரூபாயை கையிலிருந்து போட வேண்டும். மீதம் 95%, அதாவது 14.25 லட்சம் ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மூலப் பொருள்! 

டெஸ்ட் டியூப்புகள் போன்று இருக்கும் பிரிஃபார்ம்தான் (Preform) இந்த தயாரிப்புக்கு அடிப்படையான பொருள். இதனை புதுச்சேரி, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து வாங்க வேண்டும்.

தயாரிப்பு! 

மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு ரெடிமேடாகக் கிடைக்கும் பிரிஃபார்ம்’களை (பார்ப்பதற்கு பாட்டில் போலவே இருக்கும்!) வாங்கி, இயந்திரத்தின் மூலம் வெப்பமடையச் செய்தால் பிரிஃபார்ம்கள் விரிவடையும். இதை இன்னொரு இயந்திரத்தில் செலுத்தினால் பெட் பாட்டில் ரெடி! அப்படியே விற்பனைக்கு அனுப்பி விடலாம். 

கட்டடம்! 

இந்தத் தொழிலுக்கு இயந்திரத்தின் அளவைப் பொறுத்து இடத்தின் அளவும் மாறுபடும். நார்மலாக சுமார் 1,200 முதல் 1,500 சதுர அடி நிலம் தேவைப்படும். மேலும், தயாரான பெட் பாட்டில்களை வைப்பதற்கும் தனியாக இடம் தேவைப்படும். அதற்குத் தேவையான இடத்தை அருகில் வேறு எங்காவதுகூட வைத்துக் கொள்ளலாம்.

இயந்திரம்! 

இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரம் 4.10 லட்சம் ரூபாயிலிருந்து 24 லட்சம் ரூபாய் வரை பல அளவுகளில் இருக்கிறது. இவை எல்லாமே அதன் உற்பத்தி அளவு மற்றும் மின்சாரப் பயன்பாட்டின் அடிப்படையில்தான் மாறுபடும். இந்த இயந்திரங்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் கிடைக்கின்றன. 4.10 லட்சம் ரூபாய் விலை கொண்ட இயந்திரத்தைக் கொண்டு, ஒரு சுற்றில் 46 பாட்டில்களைத் தயாரிக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 1,200 அரை லிட்டர் பாட்டில்களைச் செய்ய முடியும். 

மானியம்! 

இந்தத் தொழில் பிரதமரின் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் உண்டு. இந்த மானியத் தொகையானது தொழிலுக்காகப் பெறும் வங்கிக் கடன் தொகையில் வரவு வைக்கப்படும். மூன்று வருடங்களுக்குப் பிறகு கழிக்கப்படும். இங்கு கொடுத்துள்ள முதலீட்டுத் தொகையான பதினைந்து லட்சம் ரூபாய்க்கு 3.75 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். 

வேலையாட்கள்! 

உற்பத்தித் திறன் வருடம் ஒன்றுக்கு சுமார் முப்பது லட்சம் பாட்டில்கள் எனும்பட்சத்தில் மொத்தம் 20 நபர்கள் இந்த வேலைக்குத் தேவைப்படுவார்கள். சூப்பர்வைசர் இரண்டு பேர், திறமையான வேலையாட்கள் ஆறு பேர், சாதாரண வேலையாட்கள் பன்னிரண்டு பேர் தேவைப்படுவார்கள். 

மின்சாரம்! 

நாளன்றுக்கு எட்டு மணி நேரம் இயந்திரம் ஓடும்பட்சத்தில் சுமார் 230 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.

உற்பத்தித் திறன்! 

ஒரு மணி நேரத்திற்கு 1,200 பெட் பாட்டில்களைத் தயாரிக்க முடியும். ஒரு நாளில் ஒரு ஷிப்ட் வேலை பார்த்தால் 9,600 பாட்டில்கள், ஆண்டுக்கு 28,80,000 பாட்டில்கள் தயாரிக்க முடியும். 

பிளஸ்! 

இன்றைய வாழ்க்கை முறையில் இன்றியமையாத விஷயமாக பிளாஸ்டிக் பொருட்கள் மாறிவிட்டது. 

மைனஸ்! 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இப்போது மவுசு இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அரசு ஏதேனுமொரு புதிய உத்தரவை கொண்டு வந்தால் இந்தத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும். தவிர, அதிகப்படியான போட்டிகள் இத்தொழிலில் நிலவுகிறது. 

லாபம்! 

இப்போதுள்ள கம்பெனிகள் பாட்டிலுக்கு 20 பைசா வீதம் லாபம் வைத்து விற்கின்றன. இந்த தொழிலைப் பொறுத்தவரையில் லேபர் சார்ஜ் போன்ற எல்லாச் செலவுகளும் போக லாபம் மட்டும் 15-20% வரை பார்க்க முடியும் என்கிறார் பெட் பாட்டில் கம்பெனிகளில் சர்வீஸ் செய்யும் மனோ. முதலீடு சற்று அதிகம் என்றாலும் நம்பிக்கையுடன் இறங்கினால் லாபம் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக