பக்கங்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012

அந்தரங்க ஜெபம்


நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். - (மத்தேயு 6:6).
ஒரு முறை பாலைவனப்பகுதியில் ஒரு சில கிறிஸ்தவ வியாபாரிகள் பிரயாணம் செய்தார்கள். அப்போது அவர்களை கண்ட வழியிலுள்ள கொள்ளையர்கள் கூட்டம் ஒன்று அவர்களிடம் இருககும் பெரிய தொகையை கொள்ளையடிக்க பின்தொடர்ந்தது.
இரவு நேரமானதும் வியாபாரிகள் ஒரு கூடாரம் போட்டு அங்கு தங்கினர். இது தான் நல்ல சமயம் என அறிந்த கொள்ளையர் கூட்டம் அங்கு சென்றது. ஆனால் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி! காரணம் அவர்களின் கூடாரத்தை சுற்றிலும் ஒரு கோட்டை போல இருந்ததே காரணம்! மிகவும் குழப்பமடைந்த கொள்ளையர்கள் 'நாளை பார்த்து கொள்வோம்' என திரும்பி சென்றனர். மறுநாளும் அதே நிகழ்ச்சிதான். அடுத்தநாள் வியாபாரிகளிடம் கொள்ளை கூட்ட தலைவன் சென்று விசாரித்தபோது, வியாபாரிகள் அதிசயித்து தேவனை மகிமைப்படுத்தினர். 'நாங்க்ள ஒவ்வொரு நாளும் இரவில் கைக்கோர்த்து ஜெபிப்பது வழக்கம். விட்டு வந்த எங்கள் குடும்பத்தினரை தேவன் பாதுகாக்கும்படியாகவும், எங்கள் பிரயாணத்திலும் தேவகரம் இருக்கும்படியாகவும் ஜெபிப்போம். அந்த ஜெபம் கோட்டை போல் எழும்பி எங்களை பாதுகாத்துள்ளது' என்றார். கொள்ளையர் தலைவன் ஜெபத்தை கேட்கும் இப்படிப்பட்ட தேவன் ஒருவர் இருக்கிறாரா என எண்ணி வியந்து, தேவனை ஏற்று கொண்டான்.

இப்படி அற்புதமாய் பாதுகாக்கப்பட்ட தேவ பிள்ளைகளை குறித்து, தானியேல் புத்தகத்திலும் வாசிக்கிறோம். தேவனுக்கு வைராக்கியமாய் நின்றதினிமித்தம் எரிகிற அக்கினி சூளையிலே எறியப்பட்டார்கள். லேசான தீ பட்டாலும் முதலில் கருகுவது முடிதான். அந்த முடி கூட கருகவில்லை என சாட்சியாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு காரணமென்ன? தேவனுக்கும் அவர்களுக்குமிருந்த நெருங்கிய தொடர்பு, ஜெபம், விசுவாசம் ஆகியவையே! இவையே அன்று மதில் போல நின்று அவர்களை பாதுகாத்தது.

பிரியமானவர்களே, வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்களை பார்த்து புகழுகிறோம். அதன் பெலன் எங்கிருக்கிறது தெரியுமா, மணணுக்கடியில் இருக்கும் அதன் அஸ்திபாரத்தில்தான். கனிகொடுக்கும் மரத்தினருகில் ஆவலோடு கிட்டி சேருகிறோம். அதன் கனியின் மேன்மை எங்கேயிருக்கிறது தெரியுமா? மனுஷர் காணாதபடி தரையின் கீழே நரம்புகளை போல புதையுண்டு கிடக்கும் வேர்களில்தான் இருக்கிறது. எரிந்து பிரகாசிக்கும் விளக்கின் திரி எப்போதும் எண்ணையோடு உறவாடி கொண்டே இருப்பதால்தான் மற்றவர்களுக்கு வெளிச்சத்தை கொடுக்க முடிகிறது.

அப்படியென்றால் நம்முடைய பெலன் பாதுகாப்பு, வழிநடத்தப்படுதல், பிறருக்கு சாட்சியாய் வாழ்தல், கனி கொடுக்கும் அனுபவம், பிரகாசித்தல் போன்றவை எங்கிருக்கிறது? அந்தரங்கத்தில் நாம் ஜெபிக்கும் தனி ஜெபத்தில்தான்! நான்கு சுவற்றிற்க்குள்ளாக முழங்காலில் நின்று, கண்ணீர் சிந்தி ஜெபிக்கும் ஜெபம் வெளியரங்கமான பதிலை நமக்கு கொண்டு வரும். அந்தரங்க ஜெபம் வெளியரங்கமாய் மதிலாய் நின்று நம்மை பாதுகாக்கும். ஆமென் அல்லேலூயா!

   ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா

   ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்

   ஜெபத்திலே தரித்திருந்து

   ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

   ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்

   ஜீவியத்திற்கு அதுவே சட்டம்

.
ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, ஜெபத்தின் மேன்மையை நாங்கள் உணர்ந்து, உண்மையாய் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க எங்களுக்கு கிருபை செய்யும். அந்தரங்கத்தில் நாங்கள் உண்மையாய் ஜெபிக்கும் ஜெபம் வெளியரங்கமாய் பதிலை கொண்டு வரப்போகிற தயவிற்காக நன்றி. எங்கள் ஒவ்வொருவரையும் கருத்தாய் ஜெபிக்கிறவர்களாய் மாற்றும். ஜெபித்து ஜெயத்தை பெற்று கொள்கிறவர்களாய் மாற்றும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக