பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

மூலிகை விவசாயம்


மூலிகை விவசாயம்


" ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ" - ஆவாரை செடியை மருந்துக்கு பயன்படுத்தினால் இறப்பு கூட பக்கத்தில் வராது என்பது தான் இதற்கு பொருள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு பயணம் செய்யும் போதும் இந்த ஆவாரை மஞ்சள் நிறத்தில் பூக்களுடம் சாலையின் ஒரங்களில் எங்கும் வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இப்படி வளர்ந்து கிடக்கும் செடியை பறித்து பணம் பார்க்க தான் யாரும் முன்வருவதில்லை.

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை பெண்களின் அழகை மேம்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டும் இயற்கை கிரீம்களில் இந்த ஆவரை சேர்க்கப்படுகிறது. ஆவாரையை பொடியாக்கி தேய்த்து குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும் என்கிறது சித்த நூல்கள். 

இது போல் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களிலும், வயல்வரப்புகளிலும் மருத்துவ குணமுடைய ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிறந்த மண்வளம் மற்றும் தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கிறது. இப்படியிருந்தும் உலக அளவில் இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி வணிகம் என்பது 1 சதவீதத்திற்கும் கீழ்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளையே நாடுவதாக கூறுகிறது. வளர்க்க வளர்க்க பணத்தை, டாலர்களை அள்ளித்தரும் ஒரே வளம் மூலிகைகள் மட்டுமே. 

இந்தியாவிலும் கடந்த 10-15 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருந்து தயாரிப்புக்கான மூலிகைகளின் தேவை பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு, மூலிகை தொடர்பான தொழில்களில் ஈடுபட விரும்புபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் என்று ஒரு வாரியத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு உருவாக்கிய இந்த வாரியத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவ தாவர வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறது.

மருத்துவ தாவரங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது, பாரம்பரிய மருத்துவ துறையை வளர்க்க தேவையான கொள்கைகளை உருவாக்குவது, பணம் ஈட்டக்கூடிய தாவரங்களை பயிரிடுதல், முறையான அறுவடை செய்தல், ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, பதப்படுத்துதல், மூலப்பொருட்களை உருவாக்குதல், சந்தை நிலவரம் உள்பட பல தகவல்களை மூலிகை பயிரிடுவோருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் எடுத்து சொல்வது தான் இந்த வாரியத்தின் வேலை.

இந்த வாரியம் மூலிகை பயிரிட விரும்புபவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதனை தெரிந்து கொண்டவர்கள் சிறிய அளவில் நிலம் இருந்தால் கூட அதிக அளவு டாலர்களை மூலிகைகளை விற்பனை செய்வதன் மூலம் பெற முடியும். எனவே இந்த பதிவை பதிக்கும் படிக்கும் பதிவர்களுக்கு வசதியாக தமிழ்நாட்டின் எந்த மாநிலத்தில் என்ன மாதிரியான மூலிகைகள் நன்றாக வளரும் என்ற பட்டியலையும் இங்கு கொடுத்துள்ளேன்.

இந்த தாவரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள், பயிர் செய்யவுள்ள மூலிகை, எத்தனை ஏக்கர் பரப்பில பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காக தேவைப்படும் நிதி அளவு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னையில் இயங்கும் மாநில மருத்துவ தாவர வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட திட்ட அறிக்கை தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு சிறந்த திட்ட அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு தகுந்த மானியம் வழங்கப்படும். இந்த மானியம் விண்ணப்பதாரருக்கு இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வழங்கப்படும். 

மூலிகை தாவரங்களை பயிரிடும் விவசாயிகள் அவற்றை நல்ல லாபத்தில் உள்ளூரில் விற்க தேவையான நடவடிக்கைகளை வாரியம் செய்துள்ளது. இதன்படி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிகள், மூலிகைகளை வாங்குவோர் பற்றிய தகவல்களையும் அளித்துள்ளது.

எனவே உங்கள் நிலமும் மூலிகை தாவரங்களை வளர்க்க ஏதுவானதாக இருந்தால் உடனே வர்த்தகரீதியாக லாபம் தரக்கூடிய மூலிகைகளை பயிரிட்டு பலன் பெறலாம். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள்


மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம், 
அரும்பாக்கம், சென்னை-06. 
தொலைபேசி எண்: 044-2622 2565/ 2621 4844 / 2628 1563 யில் தொடர்பு கொள்ளலாம். 


எந்த மாவட்டத்தில் என்ன மூலிகை வளரும்?

தற்போது தேசிய மருத்துவதாவர வாரியம் உலகின் மூலிகை தேவையை கருத்தில் கொண்டு 2011-12ல் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் எக்டர் பரப்பளவில் மூலிகை சாகுபடியை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 வகையான விதை மற்றும் கன்றுகளுடன் கூடிய தரம் வாய்ந்த பயிர்த் தோட்டங்களை அமைப்பது, மருந்து தர நிர்ணய ஆய்வகங்கள் நிறுவுவது உள்பட பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. எனவே கீழ்க்கண்ட மாவட்டங்களில் சில மூலிகைகள் நன்றாக வளர வாய்ப்புள்ளன. இதனை பயன்படுத்தி மருத்துவ தாவரங்களை பயிரிட்டு பணம் காணலாம்.

சித்தாமுட்டி-(தமிழகத்தின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகள்)
பாரிசவாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற கடும் வாத நோய்களை தீர்க்க உதவும் சித்தாமுட்டி 1000 மெட்ரிக் டன் அளவு தேவைப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகளிலும் பயிரிடலாம்.

கலப்பைக் கிழங்கு -( சேலம், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி )

மருந்து கூர்க்கன் (திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்)

அமுக்கரா -( கம்பம், கொல்லிமலை, ஏற்காடு, ஓசூர்)

தாட்டுபூட்டு பூ- (சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி)

கடல் அழிஞ்சில் (வேதாரணியம், கோடியக்கரை, கன்னியாகுமரி)

நுணா -(ஈரோடு, கோயமுத்தூர், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைகளான தேனி, பெரியகுளம். உடலின்நாடி நடையை உயர்த்த உதவும் நுணாவிற்கு 1000 மெட்ரிக் டன் தேவை உள்ளது.


கள்ளி முளையான் -(திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி)
சக்கரைக் கொல்லி -(திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருநெல்வேலி)

திப்பிலி -(கொல்லிமலை, பழனிமலை, கன்னியாகுமரி, குளிர்ந்த பகுதிகளான ஓசூர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர்)

அசோகா -(மேற்கு தொடர்ச்சி மலையின் பின்பகுதி)
கருச்சிதைவு, கர்ப்பசூலை உள்ளிட்ட பெண்களின் நோய்களுக்கு அருமருந்தாகும் இதன் ஆண்டு தேவை 100 மெட்ரிக் டன்கள்

மாகாலி வேர்- (தென்மலை, ஜவ்வாது மலை முழுவதும்)

பாலைக்கீரை -(திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்)

நிலவேம்பு -( ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கடலூர்)

இசப்பு கோல் -( இராமநாதபுரம், விருதுநகர்)

மேலும் வல்லாரை, மணத்தக்காளி, நெல்லி, நிலாவரை, நிலப்பணைக்கிழங்கு, சிறுகுறிஞ்சான், கறிவேப்பிலை, கீழாநெல்லி, கருந்துளசி, வசம்பு, சித்தரத்தை, ஆடாதோடை, அதிவிடயம், பச்சைநாபி, சோற்றுக்கற்றாழை போன்றவையும் மருத்துவ தேவைக்காக உலக அளவில் 500 முதல் 1000 மெட்ரிக் டன்கள் அளவு வரை தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தகுந்த மூலிகைகளை பயிரிட்டால் கை மேல் காசு நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக