பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

ஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா ..?

ஏழைகளின் ஏடிஎம் - கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா ..?


வெகசகஜமான ஒன்று விவசாயத்துக்கு மட்டுமல்ல. விவசாயிகளின் அவசரக்கால பணத்தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள் தான், அதனால் தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும், இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம்.
பசு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத அமைதியான பிராணி. அதனால் தான் குதிரையை்க காட்டிலும் மனிதனால் அது அதிகமாக நேசிக்கப்பட்டு, அவனுடனேயே வாழும் ஒரு பிராணியாக இன்று வரை இருந்து வருகிறது. மனிதனுக்கு தேவைப்படாத உணவினை சாப்பிட்டு, பயனுள்ள பலப் பொருட்களை தருகிறது. அது தரும் பால் உணவாகிறது. கோமியமும், சாணமும் உரமாகிறது. ஆடும் அதே போலத்தான்.
இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தை மட்டும் செய்தால் லாபம் கிடைக்காது. கூடவே அதன் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பினையும் கட்டாயம் செய்யவேண்டும். பொதுவாக நூறு ஆண்டில் கிட்டத்தட்ட நூறு குட்டிகள் வரை கிடைக்கிறது. ஆடுகளோட கழிவுகளின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைக்கும்.
விவசாயத்தைக் காட்டிலும் கால்நடை வளர்ப்பு மூலம் மும்மடங்கு லாபம் எடுக்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டால் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் தான் வருமானம் வரும். ஆனால் அதே நிலத்தில் ஐந்து பால் மாடுகள் வளர்த்தால் பால் வியாபாரம  மூலமாகவே கிட்டத்தட்ட 36 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இது போக சாணம் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும். கன்றுகள் அதனினும் கூடுதல் வருவாயான ஒரு விசயமே.
ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தான் பிரச்சனையாக இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் முறையாக பசுந்தீவனம் வளர்த்து ஐந்து மாடுகளையும் பராமரித்து வந்தால் அந்த விவசாயி வீட்டிலேயே நடமாடும் ஏடிஎம் மெஷின் இருப்பது போலத்தான் உடனடி பணத்தேவைக்கு அவை நிச்சய கியாரண்டி என்று நம்பிக்கைத் தரும் சிரிப்போடு சொன்ன துணைவேந்தர்.
எங்கள் பல்கலைக்கழகத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றை சொல்லித் தருகிறோம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் தாராளமாக பயிற்சி பெறலாம் என்றும் அழைப்பு வைத்தார். (தொடர்புக்கு : 044-25551574)
மதுரை மாவட்டம், மேலூரில் தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை பராமரிப்புத் துறை இருக்கிறது. இங்கே விவசாயிகளுக்கு ஆடு, மாடு வளர்ப்பு, பால் பண்ணைத் தொழில், வெண்பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு எனப் பல பிரிவுகளில் பயிற்கி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மதுரை - மேலூர் சாலையில், இருக்கும் இந்த ஆராய்ச்சி நிலையத்தில், ஒரு பால் பண்ணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தகுந்த தொழில் நுட்ப அடிப்படையில், சிறப்பான உள்கட்டமைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பால்பண்ணை, அங்கு பணியிலிருக்கும் கால்நடை பராமரிப்புத் துறை பொறுப்பாளர் டாக்டர். பால் பிரின்சி ராஜ்குமாரிடம் நாம் பேசியபோது,
“நம்ம மாநிலத்தில் இருக்கற அரசு சார்ந்த சிறந்த பத்து பண்ணைகள்ல எங்களுடைய பண்ணையும் ஒண்ணு. எங்க காலேஜில உள்ள விடுதிக்கும், குடியிருப்பு பகுதிக்கும் தேவைப்படுகிற அளவுக்கு பாலை இந்தப் பண்ணையில இருந்து எடுத்துக்கறோம்.
இங்க, நம்ம நாட்டு இனமான ரெட் சிந்தி, தார்பார்க்கர், கிர் மாடுகளும் வெளிநாட்டு இனமான ஹால்ஸ்டியன்-பிரிசீயன், ப்ரெளன் சுவிஸ், அயர்சையர், ரெட் டேன் மாடுகளும் இருக்கு. ஒவ்வொரு பசுவையும் அறிவியல் முறையில தனித்தனியா கவனிக்கறதால சராசரியா ஒவ்வொரு பசுவும் பத்துல இருந்து பதினைஞ்சு லிட்டர் வரைக்கும் கறக்குது. பால் உற்பத்திக்கு மட்டுமில்லாம, விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்கவும் இந்தப் பண்ணை பயன்படுது. தமிழ்நாட்டோட பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவங்க இங்க இலவசமாக பயிற்சி எடுத்திருக்காங்க. அதுல பல பேர் பெரிய அளவில் வெற்றிகரமா பண்ணை நடத்திட்ட இருக்காங்க என்று பண்ணையின் செயல்பாடுகள் பற்றி விவரித்தார்.
அடுத்து, நம்மிடம் பேசிய கால்நடை மருத்துவர் செல்வகத்தாலிங்கம், “பால் பண்ணை தொழிலில்ல பலர் தோத்துப் போறதா சொல்றாங்க. முறையா செஞ்சா பெரிய அளவிலான லாபம் கொடுக்கக்கூடிய தொழில் தான் இது. பொதுவா மாடு வளர்க்க ஆகுற செலவுல 70 சதவிகிதம் தீவனத்துக்குத்தான் போகுது. இவ்வளவு செலவு செஞ்சும் அதிகப் பால் கிடைக்கறது இல்ல. அதனால தான் நஷ்டம் வருது. அப்படி இல்லாம அறிவியல் பூர்வமா பண்ணையைக் கவனிச்சா நல்ல லாபம் ஈட்டலாம். அறிவியல் பூர்வம்ன்னு சொன்னா மிரண்டுற வேணாம். சாதாரணமா கடைகள்ல கிடைக்கற அடர் தீவனங்கைள வாங்கி மாடுகளுக்குக் கொடுக்கும் போது உற்பத்தி செலவு கூடுது. ஆனா, புரதச் சத்து நிறைந்த பசுந்தீவனங்களை மிகக் குறைந்த செலவில் நாமே உற்பத்தி செய்து பயன்படுத்தும் போது பால் உற்பத்தியும் அதிகரிக்கும், செலவும் குறையும்.

இங்கப் பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு பசுந்தீவனங்கள் பயிரிடும் முறைகளையும் நாங்களே சொல்லிக் கொடுத்து, விதைக் கரணைகளையும் குறைவான விலைக்குக் கொடுக்கிறோம். பசுந்தீவனங்களை முறையாகக் கொடுத்தாலே சராசரியா ஒரு பசு, பத்து லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கும். அதே போல பால் கறக்கறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்ன தீவனம் கொடுக்கணும். அப்பத்தான் ஒரு மாடு கொடுக்கக்கூடிய பாலோட சராசரி அளவு தெரியும்.
மாடு இல்லா விவசாயமும்.. மரம் இல்லா தோட்டமும் பாழ் என்ற சொலவடையை நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
தொடர்பு முகவரி
கால்நடை பராமரிப்புத்  துறை
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மேலூர் சாலை
மதுரை - 625104
போன் : 0452-242295

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக