பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

உயர்தர நாட்டு பசுக்கள்


உயர்தர நாட்டு பசுக்கள்



தார்பார்க்கர் பசு: இப்பசுவின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனம் ஆகும். பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர கிராமங்களில் இவை பரவலாக காணப்படும். வெள்ளை மற்றும் கருப்பு கலந்த வண்ணத்தில் இவை இருக்கும். இப்பசுக்களின் எடை சுமார் 295-325 கிலோ இருக்கும். நாளொன்றுக்கு 10-15 லிட்டர் பால் கறக்கும். இதன் கொம்புகள் சிறியதாக பின்நோக்கியும் மேல் நோக்கியும் இருக்கும். காதுகள் பெரியதாக முன்னோக்கி தொங்கிக் கொண்டிருக்கும்.
இதர குறிப்புகள்: முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள்-1250. ஈத்து இடைவெளி - 435 நாட்கள். நன்மை செய்யக்கூடிய கொழுப்பு சத்து - 4.9%.



கிர் பசு: இதன் பூர்வீகம் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் ஆகும். இதன் தோல் செவ்வலை நிறத்தில் மிருதுவாக இருக்கும். சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும். சாந்த குணம் கொண்டது. சிறியவர் கூட பால் கறக்கலாம். இதன் தலை பெரியதாகவும், நெற்றி விரிவடைந்ததாகவும், கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம் அளிக்கும். காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.
இதர குறிப்புகள்: எடை : 310-335 கிலோ. முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1550. ஈத்து இடைவெளி - 520 நாட்கள். நாளொன்றுக்கு பால் கறக்கும் திறன் : 10-18 லிட்டர், நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து-4.4%
காங்ரெஜ் பசு: இதுவும் குஜராத் மாநிலத்தை தாயகமாக கொண்டது. மிகவும் வலிமை வாய்ந்தது. உழவுத் தொழிலுக்கும் இப்பசுக்களை பயன்படுத்தலாம். வெள்ளை மற்றும் கறுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் இப்பசுக்கள் இருக்கும். நெற்றி அகன்று இருக்கும். கொம்புகள் பெரியதாக அகன்று விரிந்து இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும்.
இதர குறிப்புகள்: இதன் எடை: 360-385 கிலோ. முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1440. ஈத்து இடைவெளி: 490 நாட்கள். நாள் ஒன்றுக்கு பால் கறக்கும் திறன்: 10-15 லிட்டர். நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து: 4.8%.
இப்பசுக்களின் சிறப்பம்சங்கள்: வெயில் மற்றும் மழை போன்ற எந்த சீதோஷ்ணத்திற்கும் கட்டுப்பட்டு வாழும். இப்பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். தேவையற்ற ரசாயன ஊசிகள் இதற்கு தேவையில்லை. மருத்துவ செலவுகள் வைக்காது. நோய் எதிர்ப்புசக்தி அதிகம் கொண்ட இப்பசுக்களின் பால் மற்றும் நெய் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை செய்யக்கூடியவை. இதன் சாணம் மற்றும் கோமியம் அதிக சக்தி வாய்ந்த தொழு உரம் உற்பத்தி செய்ய உதவுகிறது. இயற்கை விவசாயத்திற்கு இது பெருமளவில் உதவிபுரியும். வறட்சிக் காலங்களிலும் இப்பசுக்கள் பால் கொடுக்கும் வல்லமை பெற்றது. இவைகளுக்கு தேவையான விந்தூசி இப்பொழுது தமிழகத்தில் பரவலாக கிடைக்கிறது.
எஸ்.ராஜேந்திரன், 92620 41231.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக