பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

23-ம் சங்கீதம் - ஒரு தொகுப்பு

23-ம் சங்கீதம் - ஒரு தொகுப்பு

நம்மில் எத்தனை பேர் இந்த சங்கீதத்தின் அர்த்தத்தை அறிந்துள்ளோம்? இந்த சங்கீதத்தின் வாக்குகள் எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் ? நம்மைக் குறித்து எத்தனை அக்கறை , முன்கருதல் அவரிடம் உண்டு என்பதை புரிந்துக்கொள்வோம்.

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் - உறவு

நான் தாழ்ச்சியடைவதில்லை - தன்னிறைவு

அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து -அக்கறை

அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னை கொண்டுபோய் விடுகிறார் - தேவன் என்னோடு இருக்கிறார்

தம்முடைய நாமத்தினிமித்தம் - அவருடைய திட்டம்/நோக்கம்

நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் - சோதனை

பொல்லாப்புக்கு பயப்படேன் - விசுவாசம்

தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் - நம்பிக்கை

உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும் -வழித்துணை / ஆதரவு

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி - விருப்பம்

என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர் - பரிசுத்தம் செய்தல்

என் பாத்திரம் நிரம்பி வழிகிறது - நிறைவு

என் ஜீவனுள்ள நாள் எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும் - வாக்குத்தத்தம்

நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - ஆசை

நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - நித்தியம்

தேவன் முதல் நான்கு வசனங்களில் அவர் ஒரு உண்மையான மேய்ப்பன் என்று வெளிப்படுத்துகிறார். அடுத்த இரண்டு வசனங்களில் கிருபையுள்ளவர் என்பதை தெளிவுபடுத்துகிறார். நாம் தேவனை மேய்ப்பனாய்க் காணும்போது மூன்று காரியங்களை யோசிக்கலாம்.

1. அவர் நம்முடைய தேவையை சந்திக்கிறார். (1-3)

2. அவர் நம்மை வழிநடத்துகிறார். (3 பின்பகுதி)

3. அவர் நம்மை பாதுகாக்கிறார் (4)

இப்பொழுது ஒவ்வொரு வசனமாக கண்டு இந்த பெரிய மேய்ப்பனைப் பற்றி அறிந்துகொள்வோம்

1.கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் . நான் தாழ்ச்சியடைவதில்லை.

தேவன் நமக்குரிய மேய்ப்பராயிருக்கிறார். தாவீது கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று கூறுகிறார்.இந்த அண்டசராசரங்களையும் படைத்த கர்த்தர் தன்னுடைய மேய்ப்பர். அவர் என்னுடைய வாழ்க்கையை அவர் ஆளுகைக்குள் வைத்துள்ளார் என்று கூறுவது போல் உள்ளது.இந்த காரியத்தை நீங்கள் அறிந்துள்ளீர்களா? தாவீதைப் போலக் கர்த்தரை உங்களுடைய மேய்ப்பராய் கொண்டு உள்ளீர்களா?

அவர் நல்ல மேய்ப்பனான யேகோவா தேவன் , தன்னையே நமக்காக கொடுத்துள்ளார். ஆகவே நமக்கு எதிலும் குறைவில்லை. நமக்காக தன்னையே கொடுத்த தேவனை நாம் எவ்வாறு விசுவாசிக்காமல் இருக்க முடியும்?

தேவன் தன் மந்தையை காத்து அதை பாதுகாத்து, வழிகாட்டி, கருத்தோடு விசாரித்து, நமிபிக்கைகுரியவராய் காணப்பட்டார். அதுபோல, வீட்டில் மனைவியாக, தாயாக இருக்கும் பெண்கள் குடும்பமான மந்தையை கருத்தோடு விசாரித்து, பாதுகாத்து, வழிகாட்டி, நம்பிக்குரியவர்களாக நடந்துக் கொள்ளவேண்டும். விசேஷமாக, பிள்ளைகளை சத்தியத்தின் பாதையில் வழிநடத்தி,வேதவசனங்களை கற்றுத்தந்து , ஆவிக்குரிய உண்மைகளையும் சொல்லிகொடுக்கவேண்டும்.

பெண்களாகிய நம்மோடு தேவன் இருக்கும் போது நாம் தன்னிறைவு உள்ளவர்களாக இருக்கின்றோம். நாம் எதைப்பற்றியும் கவலைக் கொள்ள தேவையில்லை.I பேதுரு 5:7 ," அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்.

2.அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னை கொண்டுபோய் விடுகிறார்.

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார் என்று தாவீது கூறுகிறார்.இந்த மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக வெளியில் சென்று நல்ல மேய்ச்சலை தேடி, மிகவும் நல்ல இடத்தை கொடுத்து , அந்த ஆடுகளின் தேவையை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறான். நம்மில் சிலருக்கு தற்போது உள்ள வேலை, வருமானம் உள்ளிட்ட காரியங்களில் திருப்தி இல்லை. இதை காட்டிலும் சிறந்த வேலை, வீடு, குடும்பம், உடல்நலம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது உண்டு. ஆனால், கர்த்தர் நம் மேய்ப்பராய் இருக்கும் போது அவர் நமக்கு சிறந்த மேய்ச்சலை காட்டுகிறவராய் இருக்கிறார். அவருடைய திட்டத்தின் படியும் தீர்மானங்களின் படியும் மிகவும் சிறப்பான காரியங்களைத் தருகிற உண்மையுள்ள மேயப்பனாய் இருக்கிறார். நீங்கள் அவரை உங்கள் வாழ்க்கையின் காரியங்களுக்காக விசுவாசிக்கிறீர்களா? பவுல் ரோமர் 8:32 ல் இவ்வாறு கூறுகிறார், 'தம்முடைய சொந்த குமாரரென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்தெப்படி?'

கர்த்தர் எப்பொழுதும் நம்முடனே இருந்து வழிநடத்தி காக்கிரவராய் இருக்கிறார். அவரிடம் நாம் ஒப்புவித்து வாழும் போது நம்மை மகிழ்ச்சி, நிறைவு, ஆறுதல் , தேவையான வசதி தந்து நடத்துவார். நாமும்,நம்முடைய குடும்பமும் அவரையே சார்ந்திருக்க வேண்டும். ஒரு நாலும் அவரை விட்டு விலகிச்செல்ல வேண்டாம்.

3.அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தின் நிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

கர்த்தருக்கு நாம் கீழ்படிந்து நடக்கும் போது நம்முடைய ஆத்துமாவை தேற்றி , ஆறுதல் படுத்தி, புல்லுள்ள இடங்களில் , அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மை கொண்டுபோய் விடுகிறார். கர்த்தர் அவருடைய திட்டத்தின்படி மாத்திரம் நம்மை வழிநடத்துகிறார்.அதுவே அவருடைய நாமத்திற்கு மகிமையையும், கனத்தையும் கொண்டு வரும் !

பெண்களாகிய நாம் நம்முடைய வழிகளை அவரிடம் ஒப்புவித்து , அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் போது, நம்முடைய வாழ்க்கைப் பாதை கர்த்தரால் செவ்வையாக்கபட்டு , ஏற்ற நேரத்தில் சிறந்த காரியங்கள் நடைபெறும். நாம் செய்கிற எல்லா காரியமும் வெற்றியுள்ளதாகக் காணப்படும்.மத்தேயு 6:33 சொல்கிறது, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் . அப்பொழுது இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும்." நாம் நம்முடைய குடும்பத்தாரை தேவனை முதலாவது தேடுகிறவர்களாக இருக்கும்படி உற்சாகப்படுத்த வேண்டும். தேவன் தன்னை உண்மையாய் தேடுகிறவர்களைக் கைவிட்டு , அவருடைய நாமத்திருக்கு மகிமை இல்லாமல் செய்வாரோ? ஒரு போதும் அப்படிச் செய்யமாட்டார். உண்மையாய் அவரை தேடி, வாழ்கையின் காரியங்களில்அவருடைய நாமத்திற்கு முதலிடம் தருகிறவர்களை, நீதியின் பாதையில் நித்தம் வழிநடத்தி, பரிசுத்தப்படுத்தி,உலகத்தாருக்கும், உங்களுக்கும் அவர் உண்மையுள்ள தேவன் என்று வெளிப்படுத்துவார்.

4.நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்.உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும்.

கர்த்தருடைய பிரசன்னம் நம்மை சுற்றி இருக்கும்போது நாம் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய விசுவாசத்தை சோதிக்கும் பிரச்சனைகள், குழப்பங்கள் வரும். ஆனாலும் , நாம் கர்த்தரிடத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். " ..., அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28" நம்மை பயப்படச் செய்கிற ஆபத்தான சூழ்நிலைகள் வரும் போது, அந்த காரியங்களை நினைத்து நாம் அஞ்சத் தேவையில்லை. நம்முடைய மேய்ப்பர் கையில் கோலும், தடியும் உண்டு. அவர் நம்மை எல்லா இக்கட்டுகளுக்கும் விலக்கி காக்க வல்லவராய் இருக்கிறார்.

பெண்கள் பெலவீனம் உள்ளவர்கள், என்று I பேதுரு 3:7 கூறுகிறது.ஆகவே, வாழ்கையின் போராட்டங்களில் நாம் சிக்கித்தவிக்கும் போது, கர்த்தருடைய ஆதரவில் , வழிகாட்டுதலில் நடந்து போரட்டங்களில் வெற்றி பெறவேண்டும்.ஆம், நாம் அவரையே பின்பற்ற வேண்டும். அவருடைய கோலும், தடியும் நம்மை தேற்றும்,கண்டிக்கும்.

5.என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர்.என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

இங்கே தாவீது, என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று கூறும்போது, அதிலுள்ள அந்த பானத்தின் தரம் மிகவும் சிறந்ததாக இருக்கலாம் அல்லது மிகுதியான பானம் அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.எப்படியாயினும், தாவீது அளவில்லா தேவக் கிருபையை ருசித்தவராகக் காணப்படுகிறார். தாவீதை தேவன் அந்த சங்கீதம் பாடிய நாள் வரை ஆதரித்ததை நினைத்து கூறுகிறார். அதுபோலவே,நமக்கும் தேவன் சோதனைகளிலும், எதிரிகளின் மத்தியிலும் நம்மை ஆதரித்து வழிநடத்த வல்லவராய் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு காலங்களில் எண்ணையால் அபிஷேகம் செய்வது வழக்கம். நம்மை தேவன் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகித்து இருக்கிறார்.அதன்மூலம் நம்முடைய அன்பின் பிதா அளவில்லா அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பைத் தருகிறார்.

6.என் ஜீவனுள்ள நாள் எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

இவ்விதமான கிருபையில் தாவீது மிகவும் தைரியமாய் இருந்தார்.அந்த கிருபை தன் வாழ்நாள் முழுவதும் அவரை தேவனுடைய ஐக்கியத்தில் நிலைக்கும்படிச் செய்தது .தேவன் நமக்கு நன்மையையும், கிருபையும் வாழ்நாள் முழுவதும் உண்டு என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். அவருடைய மாறாத அன்பு அவரின் இரக்கம் பற்றிக் கூறுகிறது. ஆகவே, நாம் தேவனோடு நிலைத்திருக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். பெண்களாகிய நாம் அவருடைய பார்வையில் விஷேசித்தவர்கள், அவருடைய வழிகாட்டுதலில் நடந்து, அவரிலே நிலைத்து, பரம வீட்டை சென்று அடைவோம். ஆமென்.
நன்றி: http://tamilbrethren.com

அவசியமான மாற்றம்!

அவசியமான மாற்றம்!

பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிக சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர் வாழும் பறவைகள் இனம் இவைகள்தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.

ஆனால் அந்த எழுபது வயது வரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச் செல்ல முடியாது. அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.

வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள்தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்துபோவது.

இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப் போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரகாத்திருக்கும். அதுபோலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புதுநகங்கள் முளைக்கத் தொடங்கும்.

புது நகங்கள் வளரத் தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப் போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர் பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

சில சமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.

பல சமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பல மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்க வேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

ஏசாயா40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.

சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
http://tamilbrethren.com -லிருந்து..

உலக மக்களுக்காக ஒரே பலி!

உலக மக்களுக்காக ஒரே பலி!

ருசமயம் சாது சுந்தர் சிங் ஊழியத்தின் பாதையில் கால்நடையாக ஒரு ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.

அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அவர்களை நோக்கி சாது சுந்தர் சிங் சென்றார்.

அந்த இடத்தில் மக்கள் ஒரு காளையை கட்டி வைத்து கத்தியால் வெட்டி, அந்த காயத்தில் காய்ந்த மிளகாய் தூளை உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கொண்டு இருந்தார்கள்.

அது வலியின் மிகுதியால் அதிகமாக கத்திக்கொண்டு இருந்தது. ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று சுந்தர் சிங் அறிந்து கொண்ட போது அவர் மிகுந்த மன வருத்தம் கொண்டார்.

அந்த இடத்தில் வாழ்ந்து வந்த மக்கள், அவர்கள் செய்த பாவங்களுக்கு பலியாக காளைகளை கட்டிவைத்து அதை வெட்டி காயத்தில் மிளகாய் தூளை வைத்து, அது தன் வழியால் எவ்வளவுக்கு அதிகமாக சத்தமிட்டு கதருகிறதோ, அவ்வளவாய் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று நினைத்துகொண்டிருந்தார்கள்.

இதை கண்ட சாது சுந்தர் சிங்கின் மனம் அவர்களது அறியாமையை நினைத்து கலங்கினது.

மனிதனின் பாவங்களுக்காக உயிர்களை பலியிடுவது தவறு என்று எடுத்துக்கூறி, தம்முடைய மக்களுக்காக தமது ஜீவனையே பலி கொடுத்த தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அவர்களிடம் கூறினார்.

இதே போல தான்-

பழைய ஏற்பாட்டின் காலத்தில் மனிதர்கள் தேவனுக்கு முன்பாக பாவம் செய்யும்போது, பாவநிவாரண பலியாக ஆடு, காளை, புறா போன்ற மிருக ஜீவன்களை பலி கொடுத்து அவர்கள் பாவமன்னிப்பு பெற்று கொண்டிருந்தார்கள்.

எனவேதான்-

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும், அவர்களின் அனைத்து பாவங்களுக்கும் ஒரே பலியாக தம்முடைய ஒரே குமாரனை தேவன் ஜீவ பலியாக ஒப்புகொடுத்தார். நமக்காக இறுதிவரை தனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லாமல் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கினார்.

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்காக சிலுவையில் தொங்கினதை தினமும் நினைத்து பாவம் செய்யாதபடி பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும்.

இயேசு கிறிஸ்து காட்டின நல்ல வழியிலே அவருக்கு பிரியமான பிள்ளைகளாக வாழ்வோம். இயேசுவை அறியாத பிறரையும் அவர்களது பாவ வழியில் இருந்து ஜீவனுள்ள நல்ல வழிக்கு அழைத்துவந்து நடக்க செய்வோம்.

கர்த்தராகிய இயேசு இதை தான் விரும்புகிறார். எல்லாம் வல்ல இயேசு காட்டிய நல்ல வழியிலே நடந்து இறுதியில் அவரது நித்தியா பேரின்ப பாக்கியத்தை பெற்றுக்கொள்வோம்.

கர்த்தர் தாமே நம் அனைவரையும் ஆசீர்வதித்து காப்பாராக.

ஆமென். அல்லேலுயா.

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" - நீதிமொழிகள் 28:13
- Hepsibai Ambrose
 
 
 

இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக நீ வருத்தப்படுவாய்!

இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக நீ வருத்தப்படுவாய்!

பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் ஜான் வெஸ்லி அவர்கள் ஒரு நாள் இரவு நடு இரவை தாண்டி குதிரையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கடுமையான குரல் ‘நிறுத்து’ என்று கூறுவதை கேட்டார். குதிரையை நிறுத்தியபோது, ஒரு திருடன், கையிலிருக்கும் பணத்தை கேட்டான். பணத்தை கொடுக்காவிட்டால் உயிரை எடுப்பதாக கத்தியை காட்டி மிரட்டினான்.

வெஸ்லி தன் கையிலிருந்த சில காசுகளை அவனிடம் கொடுத்தார். அவன் வேறு இடத்தில் ஒளித்திருப்பாரென்று அந்த குதிரையை தேடியபோது, ஒரு சில புத்தகங்களை மட்டும் கண்டு ஏமாற்றத்துடன், திரும்பி ஓட ஆரம்பித்த போது, வெஸ்லி அந்த திருடனை பார்த்து, ‘நில், உனக்கு தருவதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது’ என்று கூறினார்.

அந்த திருடன் எதையோ கொடுக்க போகிறார் என்று எண்ணி, திரும்பி அவரை நோக்கி வந்தான். வெஸ்லி கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவராக அவனிடம், ‘என் நண்பனே, நீ ஒரு நாள் இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக வருத்தபடுவாய், அப்படி வருத்தப்படும்போது, நினைத்து கொள், இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உன்னை சுத்திகரிக்கும் என்று’ என்று கூறினார்.

அந்த திருடன் அதை கேட்டுவிட்டு, திரும்ப தன் வழியே வேகமாய் கடந்து போனான், வெஸ்லி, அவன் இரட்சிக்கப்பட வேண்டுமே என்று ஜெபித்தவராக கடந்து சென்றார்.

சில வருடங்கள் கழித்து-

வெஸ்லி, சாயங்கால ஆராதனை கூட்டத்தை முடித்து, வெளிவரும்போது, அநேகர் அவரை காண வேண்டும் என்று முந்தியடித்து கொண்டு வந்தார்கள்.

அதில் ஒரு மனிதர், எபபடியாவது அவருடன் தான் பேச வேண்டும் என்று அங்கிருந்த மூப்பர்களிடம் மன்றாடினார். அப்படி பேச அவருக்கு தருணம் கிடைத்த போது, அந்த திருடன் தான்தான் என்றும், இப்போது தான் ஒரு தொழிலதிபர் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக தான் தேவனின் பிள்ளை என்றும் அவர் வெஸ்லியிடம் கூறினார்.

பின்னும் அவர் ‘ஐயா, உங்களுக்கு மிகவும் நன்றி, நீங்கள் அன்று அந்த வார்த்தைகளை சொல்லாதிருந்தால் நான் இன்னும்
திருடனாகவே இருந்திருப்பேன், நான் உங்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறேன்’ என்று கூறி அவரது கரத்தை எடுத்து முத்தமிட்டார்.

அப்போது, வெஸ்லி, ‘இல்லை, என் நண்பனே, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்தபடியால், அவருக்கே நாம் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று கூறினார்.

நமக்கு தெரியாது, நாம் சொல்கிற கர்த்தருடைய வார்த்தைகள், எப்படி கிரியை செய்யும் என்று! ஆனால் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறபடியால், அது நினைப்பதை செய்து விட்டுதான் திரும்பும்.

தேவையுள்ளவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை நம்மால் இயன்ற அளவு கூறுவோம். கர்த்தர் அதை பொறுப்பெடுத்து கொள்வார்.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே ஆகும் என்று வேத வசனம் கூறுகிறது. ஆகவே, நம்மால் இயன்றதை நாம் செய்வோம், மற்றதை ஆவியானவர் பார்த்து கொள்வார்.

ஆனால் தேவனுடைய வார்த்தைகளை நாம் சொல்லும்போது ஞானத்தோடு சொல்ல வேண்டும்,
‘பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்’ என்று இயேசுகிறிஸ்து மத்தேயு 7: 6-ல் கூறுகிறார்.

ஆகவே சொல்ல வேண்டியவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை தேவ ஞானத்தோடு ஜெபித்து சொல்லுங்கள். கர்த்தர் கிரியை செய்வார். ஆமென் அல்லேலூயா!

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).
- Immanuel Mathuram

தாயையும் தகப்பனையும் அழ வைக்கலாமா?தாயையும் தகப்பனையும் அழ வைக்கலாமா?

தாயையும் தகப்பனையும் அழ வைக்கலாமா?

▓ உன் தகப்பனை - அடிக்கலாமா?
▓ உன் தாயை - அழ வைக்கலாமா?
▓ உன்னை பெற்றவர்களை - அற்பமாக நினைக்கலாமா?
▓ உன்னை வளர்த்தவர்களை - ஒதுக்கி தள்ளலாமா?

"உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுத்த தேசத்திலே-
உன் நாட்கள் நீடித்து இருப்பதற்கும்-
நீ நன்றாக இருப்பதற்கும்-
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கட்டளையிட்டபடியே-
உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக"
(உபாகமம் 5:16)

தன் தகப்பனையாவது, தாயையாவது அடிக்கிறவன்..சபிக்கிறவன்..(யாத்திராகமம் 21:15,17)

இப்படிபட்டவர்களை நீ விட்டு விலகு....


 
இக்காலத்திற்கான வேதாகமத்தின் எச்சரிக்கை

எத்தனையோ முறை கீழ்வரும் வசனங்களை படித்திருப்போம் இல்லை கேட்டிருப்போம். இன்று ஏன் ஒரு வினாடி சிந்திக்க கூடாது:

மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக!

எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும்,
இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;

இப்படிபட்டவர்களை நீ விட்டு விலகு


சிந்திக்க :

இப்படிபட்டவர்களை நாம் விட்டு விலக வேண்டுமா?

இல்லை நம்மிடத்திலிருந்து இவற்றை விலக்க வேண்டுமா?


பரிசோதிக்க :

மேலே குறிப்பிட்ட காரியங்களில் எவற்றை என்னிடமிருந்து விலக்க வேண்டும்.


நன்றி:http://tamilchristians.com/

வெற்றியின் இரகசியம்!

வெற்றியின் இரகசியம்!

தாவீது கர்த்தருக்கென்று பெரிய காரியங்களைச் செய்தான். தாவீது தேவன் பேரில் கொண்டிருந்த வைராக்கியமும் அர்ப்பணிப்பும், ராஜாவாக அவன் நடத்திய அரிய செயல்பாடுகளும் வேதத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.

அந்நாட்களில் இருந்த பெரும் பராக்கிரமசாலிகளை சவால்விட்டுப் போருக்கு அழைத்த ராட்சதனாகிய கோலியாத்தை தாவீது வீழ்த்தினான். அவன் அபிஷேகத்தில் நிறைந்திருந்ததினால் அவன் இசைக்கருவியை இசைத்தபோது , அசுத்த ஆவிகள் அலறி ஓடின. கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவனாக அவன் இருந்தான்.

இவையெல்லாம் தாவீதுக்கு எப்படி சாத்தியமாயிற்று? கர்த்தருடைய வார்த்தையில் அவன் பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு ராட்சதனோடு போராடுவது எப்படி என்று யாரும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அவன் எல்லோருக்கும் இளையவனாக அவன் குடும்பத்தில் இருந்தபடியால் அவனுடைய சகோதர்களே அவனை சரிவர மதிக்கவில்லை.ஆடு மேய்க்கும் சிறியவனாக அவன் வெளிகளில் இருந்தபோது ஒரு அற்புதம் நடந்தது.

காலை முதல் மாலை வரை அவன் செய்ததெல்லாம் புல்வெளிகளில் அலைந்து திரிந்து தன் மந்தையின் ஆடுகளை மேய்த்து வந்ததுதான். எனினும் இப்படிப்பட்ட சுவாரசியம் அற்ற மேய்ப்பனின் பணியிலேயே தேவன் அவனுக்கு பல உன்னதமான அனுபவங்களைத் தந்தார். இதை அவனைச் சுற்றிலும் இருந்த எவரும் அறிந்துகொள்ளவில்லை.

தாவீது தன் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்தான். எனவே தன் எல்லாத் தேவைகளுக்கும் தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்தான். தாவீது கர்த்தரில் களிகூர்ந்து கொண்டிருந்தான். ஒரு முறை ஒரு சிங்கம் அவனுக்கு எதிராக வந்தது. கர்த்தர் அவனோடே இருந்து அதைக்கொன்றுபோட அவனுக்குப் பெலன் கொடுத்தார்.

பல சந்தர்ப்பங்களில் நாம் நமக்கு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் வனாந்தரத்தில் தனியே விட்டுவிடப்பட்டுள்ளோம் என்றும் குறைகூறித் திரிகின்றோம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் தேவன் நம்மை உருவாக்கி கூர்மைப்படுத்தி நம் திறமைகளை சிறப்பாக்கி அவர் பேரில் உள்ள நம் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்.

நீங்கள் கடந்துசெல்லும் துன்பம் துயரம் நிறைந்த போராட்ட வாழ்க்கை மட்டும்தான் பிறர் கண்களுக்குத் தெரியும். ஆனால் கர்த்தர் உங்கள் வாழ்வில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் எப்படி அவர் உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் யாரும் தெரிந்துகொள்வதில்லை.

தாவீது சிங்கத்தைக் கிழித்துப்போட்டபோது கை தட்டி ஆரவாரம் செய்து அவனைப் புகழ அங்கே யாரும் இருக்கவில்லை. ஆனால் பின்பு தேவன் அவனுடைய அனுபவத்தை பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேலரைக் காக்கப் பயன்படுத்தினார். தாவீது கோலியாத்தை ஒரு கூழாங்கல்லினால் வீழ்த்திய போது, அனைவரும் அதிசயித்தனர்.பல சந்தர்ப்பங்களில் தேவன் நம் வாழ்க்கையில் ஆழமான பல காரியங்களை இரகசியமாக நிறைவேற்றுகிறார்.

தனிமையில் நீங்கள் சிந்தும் கண்ணீர், தனிப்பட்ட முறையில் வனாந்திர வாழ்வில் நீங்கள் அனுபவிக்கும் அற்புதங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட விடுதலைகள் இவை அனைத்தையும் கர்த்தர் பயன்படுத்தி உங்கள் முன்நிறுத்தி நீங்கள் ஏராளமானோருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி உங்களை உயர்த்துவார்.

உங்கள் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் தேவனுடைய கட்டுபாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. இன்று வனாந்திர அனுபவத்தில் நீங்கள் இருப்பதை எண்ணி சோர்ந்துபோக வேண்டாம். கர்த்தரை விசுவாசியுங்கள். ஆண்டவரை நேசியுங்கள். தேவனில் களிகூருங்கள். உறுதியாய் இருங்கள்.

நன்றி: http://paralogapathi.blogspot.in