பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

கர்த்தரை கனப்படுத்தும் குடும்பம்

கர்த்தரை கனப்படுத்தும் குடும்பம்

தாய்மார் கற்றுக் கொடுக்க வேண்டிய சில நல்லொழுக்கங்கள்
தேவ பக்தி என்பது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு தானாக வருவது கிடையாது. அதிக ஜெபத்தொடும் கவனத்தோடும் விசுவாசியான பெற்றோர்கள் நல்லொழுக்கங்களை உருவாக்க ஏற்ற பயிற்சி கொடுத்து முயற்சி எடுக்கும் போதுதான் பிள்ளைகள் தேவ பக்தியுள்ளவர்களாய் நடக்க முடியும். எனவே தான் பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் நடத்து என்று கர்த்தரின் வசனம் சொல்லுகிறது. சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுப்பது தாயின் முக்கிய கடமையாகும்.
ஜெபத்தோடு கர்த்தரிடம் ஞானத்தைப் பெற்று இதைச் செய்யும் பொது ஏற்ற காலத்தில் நம் பிள்ளைகள் ஒலிவ மர கன்றுகளைப் போல் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வருவார்கள்.
1. வேதம் வாசித்து ஜெபிக்க கற்றுக் கொடுப்பது:
உபாகமம் 6:6,7; சங்கீதம் 1:2, யோசுவா 1:8, I தீமோத்தேயு 3:15 : வேத வசனத்தை கருத்தாக போதித்து, அதைக் குறித்து எப்போதும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று உபாகமத்தில் வாசிக்கிறோம். குடும்ப ஜெபங்களிலும் மற்றும் நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் வேதாகமக் கதைகளை இரண்டு வயது முதல் சொல்லி கவனமாய் கேட்கும்படி செய்ய வேண்டும். அது அவர்கள் காதுகளில் தொனித்துக் கொண்டும்,இருதயத்தில் பதிக்கப்பட்டதுமாய் இருக்கும்படி, அவர்கள் வயதிற்க்கேற்ப,புரியும்படி எளிய முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சாமுவேல், தாவீது,தானியேல் மற்றும் சகேயு இவர்களைப் பற்றிய சிறிய பல்லவிகளைப் பாடும்படி கற்றுக் கொடுத்து பின் அதற்கேற்றக் கதைகளை மனதில் பதியும்படி எழுத கற்றுக் கொண்ட பின் அவர்களோடு சேந்து அந்த கதைகளைப் படிக்கலாம் ஒரு சிறிய வசனம் தினமும் மனப்பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். வேதம் வாசித்தப் பின் ஜெபிப்பது மிக அவசியம். எவ்வாறு ஜெபிப்பது என்பதை கற்றுக் கொடுத்து ஜெபிக்க செய்ய வேண்டும் . இது அனுதினம் கொடுக்க வேண்டிய ஆவிக்குரிய பயிற்சி . அன்றாட வாழ்க்கையிலும் வேதத்தில் படிக்கும் சத்தியங்களைப் பொருத்தமான நேரத்தில் சம்பந்தப்படுத்தி பேசி புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
2. ஒழுங்கு:
ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கும் தூணாக நிற்பது ஒழுங்கு. நம் தேவன் ஒழுங்கை விரும்புகிறார் . சகலமும் ஒழுங்கும் கிரமமுமாய் செய்யப்பட வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் போதிக்கிறார் . நாம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை, வேதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.கர்த்தருடைய பிரதிநிதியாய் அவருக்கென்று பிள்ளைகளை கொடுக்க ஒழுங்கு அவசியம் . பிள்ளைகளை நேசிப்பதினால் ஒழுங்கு வேண்டும். தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளை தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணும். பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்.
சகோ பில்லி கிரகாமின் மனைவி ரூத் கிரகாம் சொல்வது என்னவென்றால், பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அத்தனை நல்லொழுக்கங்களும் அதற்குரிய பயிற்சியும் பத்து வயதுக்குள்ளாகவே கற்றுக் கொடுக்க வேண்டும்.சிறுவர்களாய் இருக்கும் போது நன்மை தீமை இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஒழுங்கு இருக்கிற இடத்தில் தான் பாதுகாப்பு இருக்கும்.தன் எல்லையை மீறாமல் என்னும் வளையத்திற்குள் பிள்ளைகள் வளரும் போது தீமையினின்று காக்கப்படுகிறார்கள் . பொல்லாங்கன் அவர்களைத் தொட முடியாது. தாயும் தகப்பனும் சேர்ந்து ஜெபித்து பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் ஞானத்தைத் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. கீழ்ப்படிதல்:
(1 சாமுவேல் 15:22) நற்குணங்கள் உருவாக அடிப்படைத்தேவை கீழ்ப்படிதல் .
லியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் . பிள்ளைகள் இரண்டு வயதுக்குள் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும். சொன்னவுடனே கீழ்ப்படிய வேண்டும்.மனப்பூர்வமாக சந்தோசமாக பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.முறுமுறுக்காமல் கீழ்ப்படிய வேண்டும். அரை மனதோடு கீழ்ப்படியக் கூடாது.
பெற்றோரைக் கனம் பண்ணுவதற்கு அடையாளம் கீழ்ப்படிதல். வீட்டில் கீழ்ப்படியக் கற்றுக் கொண்ட பிள்ளை சபையிலும்,பள்ளியிலும்,சமுதாயத்திலும் கீழ்ப்படிகிறவர்களாக இருப்பார்கள். அதிகாரத்தை எதிர்க்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் .
4. வேலை செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்:
(நீதி 10:4, 2, தெச. 3:10, நீதி.6.6) சோம்பேறித் தனத்திற்கு இடங்கொடாமல் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.தினந்தோறும்சில சிறிய வேலைகளை அவரவர் வயதிற்கு ஏற்ப தாய்க்கும், தகப்பனுக்கும்உதவி செய்யும்படிக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது சுயமரியாதையும் , பொறுப்பும் உள்ள பிள்ளைகள் ஆவார்கள்.நன்றாக செய்த வேலையை பாராட்ட வேண்டும்.குறைகளை அன்போடு எடுத்துச் வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும்.பிறர் தனது வேலையைச் செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது. இப்பழக்கம் பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும். உன் கைக்கு நேரிடுவது எதுவோ அதை உன் முழு பெலத்தோடு செய் என்கிற வசனத்தை ஞாபகப்படுத்தி பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.(பிரசங்கி 9:10)
5.தேக ஆரோக்கியத்திற்க்கேற்ற நற்பழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தல் :
தினந்தோறும் காலையிலும் இரவிலும் பல் துலக்கி முகம் கழுவுவது, தினந்தோறும் குளிப்பது, வெளியே போய் வந்தபின் முகம்,கை கால்,கழுவுவது சாப்பிடும் முன் ஆகாரத்திருக்கு நன்றி சொல்லி ஜெபிப்பது,நகங்களை அதிகம் வளர விடாமல் அவ்வப்போது வெட்டி சுத்தப்படுத்துதல், குளித்த பின் அழுக்கு துணிமணிகளை குளிக்கும் அறையில் தொங்கவிடாமல் துவைக்கும் துணிகளுக்குக் குறிப்பிட்டஇடத்தில் வைப்பது, காகிதத் துண்டு, குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவது, பிறருடைய பொருட்களை அவர்கள் அனுமதியின்றி எடுத்து உபயோகிக்கக் கூடாது இது போன்று நற்பழக்கங்களை மிகச் சிறிய வயது முதற்கொண்டே கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்
6.பணத்தை சரியான முறையில் உபயோகிக்கக் கற்றுக் கொடுத்தல் :
பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாய் இருக்கும்போது காசு கையில் கொடுத்து சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை தங்கள் இஷ்டப்படி வாங்கி சாப்பிட அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான யாவையும் பெற்றோரே வாங்கி கொடுப்பது நல்லது.அவர்களாகவே போய் வாங்கும்போது சுத்தமில்லாத , ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி பல வியாதிகள் வரக் கூடும்.மேலும்,சிறிய வயதில் பணத்தை எவ்வாறு உபயோக்கிப்பது என்பதும் அவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரும்போது பேருந்து செலவு போன்ற அத்தியாவசிய காரணமாக பணத்தை அவர்கள் கையில் கொடுக்க நேரிடலாம்.எனவே, பணத்தை எவ்வாறு செலவழிப்பது, எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு ஏழை எளியவருக்குக் கொடுத்து உதவுவது என்பதைக் கற்றுக் கொடுப்பது அவசியம்.கர்த்தருக்கும் ஊழியங்களுக்கும் தாராளமாய் கொடுக்க பழக்குவிக்க வேண்டும்
7.ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடக்க கற்றுக் கொடுத்தல்:
"கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள்" என்கிற போதனையை சிறு வயது முதல் கற்றுக்கொடுக்க வேண்டும்.பெற்றோர், சகோதர, சகோதரிகள், தாத்தா, பாட்டி மற்றும் முதியோர் பெரியோர் அனைவரிடமும் மரியாதையுடன் அன்பாய்ப் பழகவேண்டும். பெரியோருக்கு முன்பாக எழுந்து நின்று கனம் பண்ணுதல், வணக்கம் செய்தல், மரியாதையுடன் உட்காருவது போன்றவை அவசியம். கற்றுக் கொள்ள வேண்டியவை. 'நன்றி ', ' தயவுசெய்து ',' வணக்கம் ' போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளை மிகச் சிறிய குழந்தைகளுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும்.
8.தங்கள் உடைமைகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
சிறிய குழந்தைகள் இயல்பாக சுய நலமுடையவராய் இருப்பார்கள் . இதைத் தவிர்க்க தாயானவள் பிள்ளைகள் தங்கள் விளையாட்டுப் பொருள்,உணவு இவற்றை தன் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொடுக்க உற்சாகப்படுத்த வேண்டும். சண்டை போடுவதையோ ,ஒருவரையொருவர் அடிப்பதையோ தவிர்த்து அன்பாகப் பழகச் செய்ய வேண்டும். சிறு வயதில் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொண்டால் பெரியவர்களான பின் எல்லோரோடும் சுமுகமாக பழக முடியும் . ஒருவரையொருவர் மன்னிக்க, சகித்துக் கொள்ள தாய் தான் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
அருமை தாய்மாரே ,மேற்கூறிய நற்பண்புகள் நம் குழந்தைகளிடம் குழந்தைகளிடம் உருவாக அனுதினமும் ஜெபித்து செயல்படுவோமாக .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக