பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

அற்புத சுகம் தரும் இயேசு!

அற்புத சுகம் தரும் இயேசு!

இயேசு தன்னுடைய ஊழியப்பாதையில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அநேக மக்கள் அவரிடம் வந்து நன்மை பெற்று சென்றார்கள். வியாதியஸ்தர்கள் அவரிடம் வந்து சுகம் பெற்று சென்றார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்போம்.

வார்த்தையினால் சுகம்

நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவன் தன்னுடைய வேலைக்காரனில் ஒருவன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். இயேசுவை பற்றி கேள்விபட்ட அந்த நூற்றுக்கு அதிபதி, தன்னுடைய வேலைக்காரன் சுகம் பெறுவதற்காக அவரை நோக்கி சென்றான்.

அவன் இயேசு தன் வீட்டில் பிரவேசிக்க தான் பாத்திரன் இல்லாதவன் என்று எண்ணி, "நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்" என்றான். அநேக அதிகாரங்களை கொண்டவனாக அவன் இருந்தும், அவனது எண்ணங்களையும், அவன் வார்த்தைகளையும் கேட்ட இயேசு, "இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை" என்று சொல்லி அவனது வேலைக்காரனை தமது வார்த்தையினால் சுகப்படுத்தினார்.

ஆடையை தொட்டதால் சுகம்

இயேசுவும் அவருடைய சீடர்களும் பெரும் மக்கள் கூட்டத்தோடு போய் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு பெண் இயேசுவின் பின்னால் சென்று அவரது ஆடையின் தொங்கலை தொட்டாள். அதிலிருந்து வல்லமை பிறந்ததை அறிந்த இயேசு என்னை தொட்டது யார்? என்று கேட்டார். தெரியாது என்று அவருடனே கூட இருந்தவர்கள் கூறினார்கள்.
அப்போது அந்த ஸ்திரி, இயேசுவின் முன் வந்து விழுந்து தான் அவருடைய தொங்கலை தொட்டதையும், அவளுடைய பெரும்பாடு வியாதி அவளை விட்டு நீங்கியதையும் கூறினாள். இயேசுவின் ஆடையின் தொங்கலை தொட்டதன் மூலம் அவளின் பெரும்பாடு வியாதி அவளை விட்டு நீங்கியது.

இயேசு தொட்டதினால் சுகம்

நாயீன் ஊருக்கு இயேசு போனார். அவ்வூரின் வாசலருகே மரித்த ஒருவனை அடக்கம் செய்ய வந்தார்கள். அவன் தாய்க்கு ஒரே மகன். அவளோ ஒரு விதவை. அநேக ஜனங்கள் அவருடனே கூட வந்தார்கள். கர்த்தர் அவளை பார்த்து அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி பாடையின் அருகில் வந்து பாடையை தொட்டார். அவன் உயிரோடு எழுந்தான்.

- இவ்வாறு இயேசுவின் வார்த்தையின் மூலமாக, அவரை பற்றிகொள்வதன் மூலமாக, அவர் தொடுதலின் மூலமாக, இவ்வுலக பாடுகளில் இருந்து நாம் சுகம் பெற முடியும்.
- Hepsibai Ambrose

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக