பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக நீ வருத்தப்படுவாய்!

இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக நீ வருத்தப்படுவாய்!

பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் ஜான் வெஸ்லி அவர்கள் ஒரு நாள் இரவு நடு இரவை தாண்டி குதிரையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கடுமையான குரல் ‘நிறுத்து’ என்று கூறுவதை கேட்டார். குதிரையை நிறுத்தியபோது, ஒரு திருடன், கையிலிருக்கும் பணத்தை கேட்டான். பணத்தை கொடுக்காவிட்டால் உயிரை எடுப்பதாக கத்தியை காட்டி மிரட்டினான்.

வெஸ்லி தன் கையிலிருந்த சில காசுகளை அவனிடம் கொடுத்தார். அவன் வேறு இடத்தில் ஒளித்திருப்பாரென்று அந்த குதிரையை தேடியபோது, ஒரு சில புத்தகங்களை மட்டும் கண்டு ஏமாற்றத்துடன், திரும்பி ஓட ஆரம்பித்த போது, வெஸ்லி அந்த திருடனை பார்த்து, ‘நில், உனக்கு தருவதற்கு என்னிடம் ஒன்று இருக்கிறது’ என்று கூறினார்.

அந்த திருடன் எதையோ கொடுக்க போகிறார் என்று எண்ணி, திரும்பி அவரை நோக்கி வந்தான். வெஸ்லி கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவராக அவனிடம், ‘என் நண்பனே, நீ ஒரு நாள் இந்த வாழ்வை வாழ்ந்ததற்காக வருத்தபடுவாய், அப்படி வருத்தப்படும்போது, நினைத்து கொள், இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உன்னை சுத்திகரிக்கும் என்று’ என்று கூறினார்.

அந்த திருடன் அதை கேட்டுவிட்டு, திரும்ப தன் வழியே வேகமாய் கடந்து போனான், வெஸ்லி, அவன் இரட்சிக்கப்பட வேண்டுமே என்று ஜெபித்தவராக கடந்து சென்றார்.

சில வருடங்கள் கழித்து-

வெஸ்லி, சாயங்கால ஆராதனை கூட்டத்தை முடித்து, வெளிவரும்போது, அநேகர் அவரை காண வேண்டும் என்று முந்தியடித்து கொண்டு வந்தார்கள்.

அதில் ஒரு மனிதர், எபபடியாவது அவருடன் தான் பேச வேண்டும் என்று அங்கிருந்த மூப்பர்களிடம் மன்றாடினார். அப்படி பேச அவருக்கு தருணம் கிடைத்த போது, அந்த திருடன் தான்தான் என்றும், இப்போது தான் ஒரு தொழிலதிபர் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக தான் தேவனின் பிள்ளை என்றும் அவர் வெஸ்லியிடம் கூறினார்.

பின்னும் அவர் ‘ஐயா, உங்களுக்கு மிகவும் நன்றி, நீங்கள் அன்று அந்த வார்த்தைகளை சொல்லாதிருந்தால் நான் இன்னும்
திருடனாகவே இருந்திருப்பேன், நான் உங்களுக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறேன்’ என்று கூறி அவரது கரத்தை எடுத்து முத்தமிட்டார்.

அப்போது, வெஸ்லி, ‘இல்லை, என் நண்பனே, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்தபடியால், அவருக்கே நாம் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று கூறினார்.

நமக்கு தெரியாது, நாம் சொல்கிற கர்த்தருடைய வார்த்தைகள், எப்படி கிரியை செய்யும் என்று! ஆனால் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறபடியால், அது நினைப்பதை செய்து விட்டுதான் திரும்பும்.

தேவையுள்ளவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை நம்மால் இயன்ற அளவு கூறுவோம். கர்த்தர் அதை பொறுப்பெடுத்து கொள்வார்.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே ஆகும் என்று வேத வசனம் கூறுகிறது. ஆகவே, நம்மால் இயன்றதை நாம் செய்வோம், மற்றதை ஆவியானவர் பார்த்து கொள்வார்.

ஆனால் தேவனுடைய வார்த்தைகளை நாம் சொல்லும்போது ஞானத்தோடு சொல்ல வேண்டும்,
‘பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்’ என்று இயேசுகிறிஸ்து மத்தேயு 7: 6-ல் கூறுகிறார்.

ஆகவே சொல்ல வேண்டியவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை தேவ ஞானத்தோடு ஜெபித்து சொல்லுங்கள். கர்த்தர் கிரியை செய்வார். ஆமென் அல்லேலூயா!

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - (எபிரேயர் 4:12).
- Immanuel Mathuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக