பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

23-ம் சங்கீதம் - ஒரு தொகுப்பு

23-ம் சங்கீதம் - ஒரு தொகுப்பு

நம்மில் எத்தனை பேர் இந்த சங்கீதத்தின் அர்த்தத்தை அறிந்துள்ளோம்? இந்த சங்கீதத்தின் வாக்குகள் எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் ? நம்மைக் குறித்து எத்தனை அக்கறை , முன்கருதல் அவரிடம் உண்டு என்பதை புரிந்துக்கொள்வோம்.

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் - உறவு

நான் தாழ்ச்சியடைவதில்லை - தன்னிறைவு

அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து -அக்கறை

அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னை கொண்டுபோய் விடுகிறார் - தேவன் என்னோடு இருக்கிறார்

தம்முடைய நாமத்தினிமித்தம் - அவருடைய திட்டம்/நோக்கம்

நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் - சோதனை

பொல்லாப்புக்கு பயப்படேன் - விசுவாசம்

தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் - நம்பிக்கை

உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும் -வழித்துணை / ஆதரவு

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி - விருப்பம்

என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர் - பரிசுத்தம் செய்தல்

என் பாத்திரம் நிரம்பி வழிகிறது - நிறைவு

என் ஜீவனுள்ள நாள் எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும் - வாக்குத்தத்தம்

நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - ஆசை

நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - நித்தியம்

தேவன் முதல் நான்கு வசனங்களில் அவர் ஒரு உண்மையான மேய்ப்பன் என்று வெளிப்படுத்துகிறார். அடுத்த இரண்டு வசனங்களில் கிருபையுள்ளவர் என்பதை தெளிவுபடுத்துகிறார். நாம் தேவனை மேய்ப்பனாய்க் காணும்போது மூன்று காரியங்களை யோசிக்கலாம்.

1. அவர் நம்முடைய தேவையை சந்திக்கிறார். (1-3)

2. அவர் நம்மை வழிநடத்துகிறார். (3 பின்பகுதி)

3. அவர் நம்மை பாதுகாக்கிறார் (4)

இப்பொழுது ஒவ்வொரு வசனமாக கண்டு இந்த பெரிய மேய்ப்பனைப் பற்றி அறிந்துகொள்வோம்

1.கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் . நான் தாழ்ச்சியடைவதில்லை.

தேவன் நமக்குரிய மேய்ப்பராயிருக்கிறார். தாவீது கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று கூறுகிறார்.இந்த அண்டசராசரங்களையும் படைத்த கர்த்தர் தன்னுடைய மேய்ப்பர். அவர் என்னுடைய வாழ்க்கையை அவர் ஆளுகைக்குள் வைத்துள்ளார் என்று கூறுவது போல் உள்ளது.இந்த காரியத்தை நீங்கள் அறிந்துள்ளீர்களா? தாவீதைப் போலக் கர்த்தரை உங்களுடைய மேய்ப்பராய் கொண்டு உள்ளீர்களா?

அவர் நல்ல மேய்ப்பனான யேகோவா தேவன் , தன்னையே நமக்காக கொடுத்துள்ளார். ஆகவே நமக்கு எதிலும் குறைவில்லை. நமக்காக தன்னையே கொடுத்த தேவனை நாம் எவ்வாறு விசுவாசிக்காமல் இருக்க முடியும்?

தேவன் தன் மந்தையை காத்து அதை பாதுகாத்து, வழிகாட்டி, கருத்தோடு விசாரித்து, நமிபிக்கைகுரியவராய் காணப்பட்டார். அதுபோல, வீட்டில் மனைவியாக, தாயாக இருக்கும் பெண்கள் குடும்பமான மந்தையை கருத்தோடு விசாரித்து, பாதுகாத்து, வழிகாட்டி, நம்பிக்குரியவர்களாக நடந்துக் கொள்ளவேண்டும். விசேஷமாக, பிள்ளைகளை சத்தியத்தின் பாதையில் வழிநடத்தி,வேதவசனங்களை கற்றுத்தந்து , ஆவிக்குரிய உண்மைகளையும் சொல்லிகொடுக்கவேண்டும்.

பெண்களாகிய நம்மோடு தேவன் இருக்கும் போது நாம் தன்னிறைவு உள்ளவர்களாக இருக்கின்றோம். நாம் எதைப்பற்றியும் கவலைக் கொள்ள தேவையில்லை.I பேதுரு 5:7 ," அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்.

2.அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னை கொண்டுபோய் விடுகிறார்.

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார் என்று தாவீது கூறுகிறார்.இந்த மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக வெளியில் சென்று நல்ல மேய்ச்சலை தேடி, மிகவும் நல்ல இடத்தை கொடுத்து , அந்த ஆடுகளின் தேவையை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறான். நம்மில் சிலருக்கு தற்போது உள்ள வேலை, வருமானம் உள்ளிட்ட காரியங்களில் திருப்தி இல்லை. இதை காட்டிலும் சிறந்த வேலை, வீடு, குடும்பம், உடல்நலம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது உண்டு. ஆனால், கர்த்தர் நம் மேய்ப்பராய் இருக்கும் போது அவர் நமக்கு சிறந்த மேய்ச்சலை காட்டுகிறவராய் இருக்கிறார். அவருடைய திட்டத்தின் படியும் தீர்மானங்களின் படியும் மிகவும் சிறப்பான காரியங்களைத் தருகிற உண்மையுள்ள மேயப்பனாய் இருக்கிறார். நீங்கள் அவரை உங்கள் வாழ்க்கையின் காரியங்களுக்காக விசுவாசிக்கிறீர்களா? பவுல் ரோமர் 8:32 ல் இவ்வாறு கூறுகிறார், 'தம்முடைய சொந்த குமாரரென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்தெப்படி?'

கர்த்தர் எப்பொழுதும் நம்முடனே இருந்து வழிநடத்தி காக்கிரவராய் இருக்கிறார். அவரிடம் நாம் ஒப்புவித்து வாழும் போது நம்மை மகிழ்ச்சி, நிறைவு, ஆறுதல் , தேவையான வசதி தந்து நடத்துவார். நாமும்,நம்முடைய குடும்பமும் அவரையே சார்ந்திருக்க வேண்டும். ஒரு நாலும் அவரை விட்டு விலகிச்செல்ல வேண்டாம்.

3.அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தின் நிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

கர்த்தருக்கு நாம் கீழ்படிந்து நடக்கும் போது நம்முடைய ஆத்துமாவை தேற்றி , ஆறுதல் படுத்தி, புல்லுள்ள இடங்களில் , அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மை கொண்டுபோய் விடுகிறார். கர்த்தர் அவருடைய திட்டத்தின்படி மாத்திரம் நம்மை வழிநடத்துகிறார்.அதுவே அவருடைய நாமத்திற்கு மகிமையையும், கனத்தையும் கொண்டு வரும் !

பெண்களாகிய நாம் நம்முடைய வழிகளை அவரிடம் ஒப்புவித்து , அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் போது, நம்முடைய வாழ்க்கைப் பாதை கர்த்தரால் செவ்வையாக்கபட்டு , ஏற்ற நேரத்தில் சிறந்த காரியங்கள் நடைபெறும். நாம் செய்கிற எல்லா காரியமும் வெற்றியுள்ளதாகக் காணப்படும்.மத்தேயு 6:33 சொல்கிறது, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் . அப்பொழுது இவைகள் எல்லாம் கூட கொடுக்கப்படும்." நாம் நம்முடைய குடும்பத்தாரை தேவனை முதலாவது தேடுகிறவர்களாக இருக்கும்படி உற்சாகப்படுத்த வேண்டும். தேவன் தன்னை உண்மையாய் தேடுகிறவர்களைக் கைவிட்டு , அவருடைய நாமத்திருக்கு மகிமை இல்லாமல் செய்வாரோ? ஒரு போதும் அப்படிச் செய்யமாட்டார். உண்மையாய் அவரை தேடி, வாழ்கையின் காரியங்களில்அவருடைய நாமத்திற்கு முதலிடம் தருகிறவர்களை, நீதியின் பாதையில் நித்தம் வழிநடத்தி, பரிசுத்தப்படுத்தி,உலகத்தாருக்கும், உங்களுக்கும் அவர் உண்மையுள்ள தேவன் என்று வெளிப்படுத்துவார்.

4.நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்.உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும்.

கர்த்தருடைய பிரசன்னம் நம்மை சுற்றி இருக்கும்போது நாம் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய விசுவாசத்தை சோதிக்கும் பிரச்சனைகள், குழப்பங்கள் வரும். ஆனாலும் , நாம் கர்த்தரிடத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். " ..., அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28" நம்மை பயப்படச் செய்கிற ஆபத்தான சூழ்நிலைகள் வரும் போது, அந்த காரியங்களை நினைத்து நாம் அஞ்சத் தேவையில்லை. நம்முடைய மேய்ப்பர் கையில் கோலும், தடியும் உண்டு. அவர் நம்மை எல்லா இக்கட்டுகளுக்கும் விலக்கி காக்க வல்லவராய் இருக்கிறார்.

பெண்கள் பெலவீனம் உள்ளவர்கள், என்று I பேதுரு 3:7 கூறுகிறது.ஆகவே, வாழ்கையின் போராட்டங்களில் நாம் சிக்கித்தவிக்கும் போது, கர்த்தருடைய ஆதரவில் , வழிகாட்டுதலில் நடந்து போரட்டங்களில் வெற்றி பெறவேண்டும்.ஆம், நாம் அவரையே பின்பற்ற வேண்டும். அவருடைய கோலும், தடியும் நம்மை தேற்றும்,கண்டிக்கும்.

5.என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறீர்.என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

இங்கே தாவீது, என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று கூறும்போது, அதிலுள்ள அந்த பானத்தின் தரம் மிகவும் சிறந்ததாக இருக்கலாம் அல்லது மிகுதியான பானம் அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.எப்படியாயினும், தாவீது அளவில்லா தேவக் கிருபையை ருசித்தவராகக் காணப்படுகிறார். தாவீதை தேவன் அந்த சங்கீதம் பாடிய நாள் வரை ஆதரித்ததை நினைத்து கூறுகிறார். அதுபோலவே,நமக்கும் தேவன் சோதனைகளிலும், எதிரிகளின் மத்தியிலும் நம்மை ஆதரித்து வழிநடத்த வல்லவராய் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு காலங்களில் எண்ணையால் அபிஷேகம் செய்வது வழக்கம். நம்மை தேவன் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகித்து இருக்கிறார்.அதன்மூலம் நம்முடைய அன்பின் பிதா அளவில்லா அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பைத் தருகிறார்.

6.என் ஜீவனுள்ள நாள் எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னைத் தொடரும். நான் கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

இவ்விதமான கிருபையில் தாவீது மிகவும் தைரியமாய் இருந்தார்.அந்த கிருபை தன் வாழ்நாள் முழுவதும் அவரை தேவனுடைய ஐக்கியத்தில் நிலைக்கும்படிச் செய்தது .தேவன் நமக்கு நன்மையையும், கிருபையும் வாழ்நாள் முழுவதும் உண்டு என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். அவருடைய மாறாத அன்பு அவரின் இரக்கம் பற்றிக் கூறுகிறது. ஆகவே, நாம் தேவனோடு நிலைத்திருக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். பெண்களாகிய நாம் அவருடைய பார்வையில் விஷேசித்தவர்கள், அவருடைய வழிகாட்டுதலில் நடந்து, அவரிலே நிலைத்து, பரம வீட்டை சென்று அடைவோம். ஆமென்.
நன்றி: http://tamilbrethren.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக